முதுமைக்கால மறதி நோயுடைய பாட்டியுடன் வாழ்ந்து வந்த வெல்டா, தனது பாட்டியின் முதுமைக்கால மறதி நோயறிதலுடனான தனது பயணத்தைப் பற்றியும், அது வெல்டாவின் மூப்படைதல், நினைவாற்றல் மற்றும் அன்பு பற்றிய புரிதலை எவ்வாறு மறுவடிவமைத்தது என்பதையும் நினைவு கூறுகிறார். அவரது கதை இதோ இங்கே.
பன்றி உறுப்பு சூப்பின் வாசனை என்னை என் குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் செல்வதில் ஒருபோதும் தவறியதே இல்லை, என் பாட்டி அல்லது ‘ஆ மா’ நாங்கள் அவரைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் அதைச் செய்வார். பெற்றோர் உடன்பிறந்தோர் பிள்ளைகள், மாமாக்கள் மற்றும் அத்தைகள் சூழ்ந்திருக்க, எனது பாட்டியின் 4-அறைகள் கொண்ட வீட்டில், சிரிப்பலைகள் நிறைந்திருக்க, நான் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து அந்த சூப்பை ஒவ்வொரு கோப்பையாக, ஒன்றன் பின் போன்றாக பருகியதை இன்னும் என்னால் நினைகூர்ந்து பார்க்க முடிகிறது. அவருடைய உணவின் சுவையே எங்கள் குடும்பத்தை நெருக்கமாக ஒட்டி வைத்தது; அது ஆறுதல் அளிக்கும், அரவணைக்கும் மற்றும் அன்பைக் குறிக்கும் சுவையாக இருந்தது.
2014-ல் என் பாட்டிக்கு நோய் கண்டறியப்பட்ட பிறகு, குடும்பம், மூப்படைதல் மற்றும் அன்பு குறித்த எனது பார்வை நான் எதிர்பார்க்காத விதத்தில் சவாலானதாக இருந்தது. ஒரு காலத்தில் எங்கள் குடும்பத்தில் பலமான தூணாக இருந்த பெண்மணி, பலவீனமானவராகவும், பிறரைச் சார்ந்திருப்பவராகவும் மாறினார். ஒரே இரவில், பழக்கமான விஷயம் நிச்சயமற்றதாக மாறியது, வாழ்க்கை எவ்வளவு விரைவாக மாறக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ள நான் சிரமப்பட்டேன்.
அவருக்கு நோய் கண்டறியப்படுவதற்கு முன்பு, ஆ’மா (சீன மொழியில் ‘பாட்டி’ என்று அர்த்தம்) துடிப்பானவராகவும், வாழ்க்கையை அனுபவித்து வாழக்கூடியவராகவும் இருந்தார். அவர் எப்போதும் தனது தோழிகளுடன் வெளியே செல்வார், தினமும் காலை உடற்பயிற்சி செய்வார். எங்கள் குடும்பத்தின் அன்பு மற்றும் மகிழ்ச்சியின் கலங்கரை விளக்கமாக அவர் இருந்தார். நான் அவரை அடிக்கடி பார்க்க செல்வேன், பள்ளி மற்றும் உணவு பற்றி உரையாடி மகிழ்வேன், அவருடைய நோயறிதலுக்கு முன்பு இத்தகைய தருணங்களுக்கு முடிவில்லை என்று நான் உணர்ந்தேன்.
அவருக்கு வயதாகையில், எங்கள் குடும்பத்தினர் விடுமுறை நாட்களில் அவரை அழைத்துச் செல்லத் தொடங்கினர். 2010-களில் சீனாவின் கிராமப்புறப் பகுதிக்கு ஒருமுறை சென்றபோது, அவர் தவறி கீழே விழுந்தார். அவருக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், வீடு திரும்பிய பிறகு ஏதோ மாற்றம் அவரிடம் ஏற்பட்டதை நாங்கள் கவனித்தோம்; அவர் எங்கே இருந்தார், அவருடைய பணம் எங்கே இருந்தது, மற்றும் பிற சிறு சிறு விவரங்களை அவர் மறக்க ஆரம்பித்தார். இதனைக் கண்டு கவலையடைந்த நாங்கள், அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம், அப்போதுதான் முதுமைக்கால மறதி நோய் என்ற வார்த்தை எங்கள் குடும்பத்தின் சொற்களஞ்சியத்தில் ஒரு பகுதியாக மாறியது.
வருடங்கள் செல்லச் செல்ல, அவருடைய நினைவாற்றல் திறன் மெதுவாக மங்கின. நானும் என் பெற்றோரின் உடன்பிறந்தோர் பிள்ளைகளும் பள்ளி மற்றும் வேலையில் பிஸியாகிவிட்டோம், நான் மட்டுமே அவரை வழக்கமான முறையில் சென்று பார்த்து வந்தேன். அவருடைய மருத்துவ நிலை தீவிரமடைகையில் என்னை நினைவில் வைத்துக் கொள்ள அனுமதித்ததால், நான் அடிக்கடி அவரைப் பார்ப்பது கெட்டதிலும் ஒரு நல்லதாக இருந்தது. ஒவ்வொரு முறையும் ஒரே உரையாடலாக இருந்தாலும், ஒன்றாக அமர்ந்து பேசுவது எங்கள் அமைதியான வழக்கமாகிவிட்டது.
நாங்கள் அடிக்கடி ஒன்றாக உணவு சமைப்போம், அவர் செய்முறைகளை நினைவில் வைத்திருந்தார், அதே நேரத்தில் என்னென்ன பொருட்களைச் சேர்க்க வேண்டும் என்றும், குடும்பத்திற்குப் பிடித்த உணவுகளை எப்படிச் செய்வது என்றும் எனக்குக் கற்றுக் கொடுப்பார். அவருடைய மருத்துவ நிலை தீவிரமடைந்த போதிலும் கூட, இந்த உறவை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க சிறு சைகையே போதுமானது என்பதை நான் கற்றுக்கொண்டேன்.
அவர் எனக்கு இன்னமும் அதே பழைய ஆ’மா (பாட்டி) தான். பெரும்பாலும், இந்தத் தருணங்கள் பார்ப்பவர்களுக்கு சலிப்பாக தோன்றினாலும், எங்கள் இருவரின் முகங்களிலும் புன்னகையை வரவழைக்கும். உயிர்ப்புடன் இருக்க அன்பிற்கு எதையும் புதிதாக செய்யவேண்டிய தேவையில்லை என்பதை நான் கற்றுக்கொண்டேன். சில நேரங்களில் எதுவும் மாறாதபோதும் கூட, மீண்டும் மீண்டும் ஒன்றை நிலைத்தன்மையுடன் செய்வதே போதுமானது.
அன்பு இப்போது காட்சியளிக்கும் விதம்
ஆ’மாவின் (பாட்டியின்) முதன்மைப் பராமரிப்பாளர்களில் ஒருவரான என் அம்மா, இந்தக் காலகட்டத்தில் எங்கள் குடும்பத்தின் முதுகெலும்பாக மாறினார். அவரது வலிமை என்னை வியக்க வைத்தது. நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் மருத்துவ நிபுணர்களிடமிருந்து கிடைத்த ஆதரவினாலேயே அவரால் திடனாக நிற்க முடிந்தது என்பதை நான் கவனித்தேன். எனது பாட்டியை மருத்துவ சந்திப்புகளுக்கு அழைத்துச் செல்வது, அவருடைய வழக்கமான பகல்நேரப் பராமரிப்பு நடவடிக்கைகளைப் பராமரிப்பது என என் பாட்டிக்கு போதுமான பராமரிப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் என் அம்மா அடிக்கடி முன்முயற்சி எடுத்தார். என் பாட்டிக்கு பல பிள்ளைகள் இருப்பது அதிர்ஷ்டம், ஒவ்வொருவரும் அவரவர் வழியில் பங்களித்தனர், அவருடன் பரிசோதனைகளுக்குச் செல்வது, உணவுத் தயாரிப்பது அல்லது அடிக்கடி அவரை வந்து பார்த்துச் செல்வது என ஒவ்வொருவரும் அவரது பங்கைச் செய்தனர்.
என் பாட்டிக்குத் தேவையான பராமரிப்பை நன்கு புரிந்துகொள்ள என் அம்மா அடிக்கடி மருத்துவர்கள் மற்றும் தாதியர்களிடமிருந்து வழிகாட்டுதலை நாடினார், ஆனால் அவரைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து கிடைத்த உணர்ச்சிபூர்வமான ஊக்கமே அவர் உறுதியுடன் இருக்க அவருக்கு உதவியது.
அவர் பரிவுகளையும் சோர்வுகளையும் சீராகக் கையாண்டதைப் பார்க்கையில், பராமரிப்பது என்பது அன்பின் செயல் மட்டுமல்ல, சகிப்புத்தன்மை மற்றும் பணிவுடன் நடப்பது என்பதையும் எனக்குக் காட்டியது. உதவி கேட்பது பலவீனத்தின் அடையாளம் அல்ல என்பதையும், அது மற்றவர்களையும் நம்மையும் சிறப்பாகக் கவனித்துக் கொள்ள அனுமதிக்கும் தைரியமான செயல் என்று என் அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்தார்.
என் ஆ’மாவின் (பாட்டியின்) நோயறிதல் மூலம், அன்பானது நீண்டகால உறவில் பெருக்கெடுக்கும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். அன்பு என்பது இனி அனைவரும் சேர்ந்து உருவாக்கிய நினைவுகள் அல்லது உரையாடல்களை மட்டுமே நாடியிருக்காது, மாறாக பொறுமை, மென்மை மற்றும் இருப்பில் அன்பை வெளிப்பட வேண்டும். ஒருவரை நேசிப்பது என்றால் என்ன என்பது பற்றிய எனது பார்வை அவருக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு மாறியது – அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதற்காக அல்லாமல், அவர்கள் யாராக இருக்கிறார்கள் என்பதற்காக, ஒவ்வொரு தருணமும் ஒருவரை நேசிக்க வேண்டும்.
இந்த அனுபவத்தின் மூலம், நன்றியுணர்வின் ஒரு புதிய வடிவத்தை நான் பாராட்ட ஆரம்பித்துள்ளேன்: பராமரிப்பின் மூலம் வளரும் ஒரு விதமான நன்றியுணர்வு, நான் கண்ட அசைக்க முடியாத அன்பையும் வழிகாட்டுதலையும் நினைவூட்டுகிறது.
"முதுமைக்கால மறதி நோய் ஒரு நபரின் மனதை மட்டுமல்லாது, அவர்களின் உடல் மற்றும் அவர்களின் குடும்ப உறவுகள் என அனைத்தையும் மாற்றுகிறது, எனவே நீங்கள் உண்மையிலேயே தயாராக இல்லாதபோதும் கூட, அன்புக்குரியவர்களை அந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு நடந்துக்கொள்ளும் விதம் மாற்றுகிறது."
வெல்டா கோ (Velda Koh)
என்னைப் பொறுத்தவரையில், முதுமைக்கால மறதி நோய் என்பது ஓர் உளவியல் ரீதியான போர், ஏனென்றால் இது தற்போதைய மாற்றங்களை ஏற்றுக்கொள்வதை விட நிறைய விஷயங்களை உள்ளடக்கிய என்பதுடன், அவர்களின் ஒவ்வொரு தேவையையும் எதிர்பார்த்து எதிர்காலத்தை நோக்கி சிந்திப்பதும் ஆகும். என் ஆ’மாவின் (பாட்டியின்) உடல்நிலை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், நான் அவருடன் கழித்த தருணங்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். வாழ்க்கை மாறும், நினைவுகள் மங்கும், காலம் நகர்ந்து செல்லும் என்பதை இது எனக்கு நினைவூட்டுகிறது. எனக்குத் தெரிந்ததெல்லாம், ஒரு காலத்தில் ஒரு எளிய கிண்ண சூப்பில் ஊற்றப்பட்ட அன்பு, பல வருடங்கள் கழித்தும் கூட, என்னைத் தொடர்ந்து புத்துயிரூட்டும் என்பதுதான்.
எழுத்தாளர் பற்றி

வெல்டா கோ
வெல்டா என்பவர் சந்தைப்படுத்தல் துறையில் நிர்வாகியாக இருக்கிறார், அவர் யோசனைகள், கதைகள் மற்றும் கொள்கைகளை வாழ்வில் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறார். அவருடைய ஓய்வு நேரத்தில், அவர் இசைக்கருவிகளை வாசிப்பது, பயணம் செய்வது, நல்ல கஃபேக்களைக் கண்டுபிடிப்பது போன்றவற்றை ரசித்து செய்கிறார்.