Playback speed:
அக்கறை காட்டுவது என்பது என் அன்புக்குரியவரிடம் எப்போதும் இருக்கும் ஒன்றுதான்.
2010 ஆம் ஆண்டு, எனது வயதான தாயார் இங் சூக் செங்கை கவனித்துக் கொள்வதற்காக, 54 வயதில் எனது முழு நேர வெளியான செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தேன். அவருக்கு 76 வயது இருந்தபோது, அந்த ஆண்டின் தொடக்கத்தில் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. அவருக்கு ஏற்பட்ட பக்கவாதத்தினால் அவரது நடமாட்டம் பாதித்தது, அவர் நடப்பதற்கு நடைபயிற்சி சட்டகம் அல்லது சக்கர நாற்காலியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. என் தாய்க்கு தீங்கற்ற பராக்ஸிஸ்மல் பொசிஷனல் வெர்டிகோ இருந்தது, இதனால் அவருக்கு தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் கீழே விழும் அபாயம் இருந்தது.
அக்கறை காட்டுவது என்பது ஒரு பராமரிப்பாளராக உரிமையை எடுத்துக்கொள்வது.
2014 இல், எனது தாய்க்கு முதுமைக்கால மறதி நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, முதுமைக்கால மறதி நோயைப் பற்றி முடிந்தவரை சீக்கிரம் கற்றுக்கொள்வதற்கான சவாலை நான் ஏற்றுக்கொண்டேன், எனவே இதனால் ஏற்படக்கூடிய சவால்களை சிறப்பாக சமாளிக்க நான் ஆயத்தமாக முடியும். நான் சொற்பொழிவுகள் மற்றும் ஆதரவுக் குழு சந்திப்புகளில் கலந்துகொண்டேன், பராமரிப்பாளர் பயிற்சி மானியம் நிதியுதவி அளிக்கும் திறன் பயிற்சி திட்டங்களில் பங்கேற்றேன். என் தாயைப் பராமரிக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டேன், நான் பராமரிக்கவில்லை என்றால் வேறு யார் பராமரிப்பாளர்கள் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
அக்கறை காட்டுவது என்பது என் அன்புக்குரியவரை மதிப்பதும், அவருடைய மனநிலையை வைத்துப் பார்க்காமல் அவரைத் தனியாகப் பார்ப்பதும் ஆகும்.
என் தாயின் நடத்தை, அது எவ்வளவு நியாயமற்றதாகத் தோன்றினாலும், முதுமைக்கால மறதி நோயும் அது அவரது மூளையில் ஏற்படுத்திய விளைவுகள் காரணமாகவே அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை நான் உணர்ந்தேன். காலப்போக்கில், என் தாய் கடந்த காலத்தில் எப்படி இருந்தார், இப்போது எப்படி இருக்கிறார் என்று ஒப்பிட்டுப் பார்ப்பதை விட்டுவிட்டு, நான் அவரது தற்போதைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் மீது கவனம் செலுத்த கற்றுக்கொண்டேன். இந்த முதுமைக்கால மறதி நோய்க்குப் பின்னால் ஒரு நபர் இருக்கிறார், அவரைப் புரிந்துகொண்டு அந்த நபருடன் தொடர்புப்படுத்தி பார்க்க விரும்பினேன். இந்த மனப்பான்மை, என் தாய்க்கு இத்தகைய நோய்நிலை இருந்தபோதிலும் அவர் கண்ணியமான வாழ்க்கையை வாழ உதவிப் புரியும் என்பது எனக்குத் தெரியும், மேலும் என் பார்வையில் அவர் எப்பவுமே சிறப்பு வாய்ந்த ஒருவராகவே இருக்கிறார்.
அக்கறை காட்டுவது என்பது, மன அழுத்தம் நிறைந்த வேலைகள் அல்லது உடல் ரீதியாக கடினமான வேலைகள் இருந்தாலும் கூட, என் அன்புக்குரியவரை தவறாமல் கவனித்துக்கொள்வதே.
மே 2017 இல், என் தாய்க்கு மீண்டும் ஒரு பெரிய பக்கவாதம் ஏற்பட்டது, அதன்போது அவரது உடலின் வலது பக்கம் செயலிழந்தது. இது அவரது முதுமைக்கால மறதி நோயை கடுமையான நிலைக்குத் தள்ளியது, மேலும் அவருக்குத் தீவிர சிகிச்சை தேவைப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, நான்கு மாதங்களுக்குப் பிறகு, எனக்கு ஒரு விபத்து நேர்ந்து, இடுப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இதனால் எனக்கு எனக்கென உடல் ரீதியான கட்டுப்பாடுகள் இருந்தன, என் தாயை தொடர்ந்து கவனித்துக் கொள்வது ஒரு சவாலாக இருந்தது. புதுமையான தீர்வுகள் மூலம் எனது இருள் காலத்தில் நான் வலிமையைக் கண்டேன், உதாரணத்திற்கு என் தாயை படுக்கையிலிருந்து குளிப்பதற்காக குளியல் இடத்துக்கு மாற்றுவது, படுக்கையினால் ஏற்படும் உடல் புண்களைத் தடுக்க முதியோர் நாற்காலி அல்லது சக்கர நாற்காலியில் மாற்றுவது போன்ற அன்றாட வழக்கத்தை நிர்வகிக்க ஏற்றி இறக்கும் கருவியைப் பயன்படுத்தினேன். அத்தோடு அவருக்கு உடை மாற்றுதல், உணவூட்டுதல் மற்றும் அவரது டயப்பர்களை மாற்றுதல் போன்றவற்றையும் செய்தேன். என் தாயால் தூங்க முடியாத போதெல்லாம், நான் இரவு முழுவதும் அவரது பக்கத்தில் இருந்து விழித்திருப்பேன். நவம்பர் 2017 இல், அவருக்கு உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டது, அப்போது அவருக்கு டிஸ்பேஜியா (விழுங்குவதில் குறைபாடு) இருப்பது கண்டறியப்பட்டது. அவருடைய உணவு சரியான பதத்தில் இருப்பதை நான் உன்னிப்பாக கவனித்து உறுதிசெய்தேன், நீண்ட நேரம் அவருக்கு சிரமமின்றி உணவளிப்பேன்.
அக்கறை காட்டுவது என்பது எனது சுய பராமரிப்புத் தேவைகளைக் கவனித்துக்கொள்வது, அப்போதுதான் என்னால் எனது அன்புக்குரியவரையும் கவனித்துக் கொள்ள முடியும்.
என்னுடைய சொந்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் கவனிக்கும் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொண்டேன். இதன் விளைவாக, என் தாயின் பராமரிப்பாளராக தொடர்ந்து நான் சேவை செய்ய இயலும் வகையில், எப்போதும் பயனுள்ள தகவல்களைத் தேடுவதையும், சமூக வள ஆதாரங்களைக் கலந்தாலோசிப்பதையும், ஆதரவுக் குழுக்களில் சேர்வதையும், வழக்கமான இடைவேளைகள் எடுத்துக்கொள்வதையும் உறுதிசெய்தேன். பராமரிப்பாளரின் பயணம் சில நேரங்களில் தனித்தும் நீண்டதாகவும் இருக்கும் என்பதால் இது அவசியம் என்று எனக்குத் தெரியும்.
அக்கறை காட்டுவது என்பது என் அன்புக்குரியவருடன் தரமான நேரத்தை செலவிடுவதில் மகிழ்ச்சி அடைவதே.
என் தாயுடனான எனது உறவு, அவரை மீண்டும் அறிந்துகொள்வதும், அவருடன் ஒரு புதிய உறவை உருவாக்குவதுமாக மாறியது. முதுமைக்கால மறதி நோய் உள்ள ஒருவரால் இன்னமும் பல விஷயங்கள் செய்ய முடியும் என்பதால், அவருடன் நேரத்தை செலவிடுவது சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை உணர்ந்தேன். நான் பிறரிடம் நடந்துக் கொள்வதைப் போலவே, என் தாயை மதித்து – அனுபவச் செல்வத்தைக் கொண்ட ஒரு தனித்துவமான நபராக – கவனித்துக்கொண்டேன். அவருடைய மனநலப் பிரச்சினையுடன் அவர் போராடும் காலம் முழுவதும் அவருக்குப் பாதுகாப்பான, அன்பான மற்றும் நிலையான சூழலைக் கொடுக்க, அவருக்குத் துணையாக நான் நீண்ட நேரம் செலவிட்டேன்.
அக்கறை காட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல, ஆனால் அது என் தாயிடத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அசாதாரண சவால்கள் இருந்தாலும் கூட, தனது அன்புக்குரியவரைப் பராமரிக்கும் நபர் எவரும் தனது பயணத்தைப் பற்றி வருத்தப்படுவது அரிது என்று நான் நம்புகிறேன்.
கதை மற்றும் புகைப்படம், ஜேனட் கோ ஹுய் கெங் வழங்கியது (கதை திருத்தப்பட்டது)
கதை பங்களிப்பாளர்: Caregivers Alliance Limited.