Playback speed:
டெர்ரென்ஸ் டிங் கடந்த ஆண்டு முதல், ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சுகாதார சேவைகள் மேலாண்மையில் பட்டயச் சான்றிதழுக்கு படிக்கும் அதே நேரத்தில், டிமென்ஷியா சிங்கப்பூரில் தொண்டூழியம் செய்து வருகிறார். மார்ச் மாதத்தில், அவர் டிமென்ஷியா சிங்கப்பூரின் முதல் இளையர் சமூகத் தலைவரானார். டெர்ரென்ஸின் அபிலாஷைகள் பற்றியும், முதுமைக்கால மறதி நோய் சமூகத்தில் இளையர் தொண்டூழியத் தலைவராக இருப்பது அவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் பற்றியும் மேலும் பகிர்ந்து கொள்ள நாங்கள் அவரை அழைத்தோம்.
வணக்கம் டெர்ரென்ஸ், உங்களைப் பற்றி எங்களுக்குச் செல்லுங்கள்.
வணக்கம்! நான் சமீபத்தில்தான் தொழிற்கல்லூரியில் பட்டயம் பெற்றேன், தற்போது நிலச் சொத்து படித்து வருகிறேன். நான் பல அமைப்புகளில் தீவிரமாக தொண்டூழியம் செய்து வருகிறேன் – அவற்றில் ஒன்று டிமென்ஷியா சிங்கப்பூர் (DSG) – தேசிய சேவை படை ஆட்சேர்க்கைக்காக காத்திருக்கும் அதே வேளையில் எனது தனிப்பட்ட பணி மேம்பாட்டில் முக்கியமாக கவனம் செலுத்தி வருகிறேன்.
தொண்டூழியத்தில் உங்களுக்கு எப்படி ஈடுபாடு ஏற்பட்டது?
ஆரம்பத்தில், தேசிய இளையர் சாதனையாளர் விருதுக்காக (NYAA) நான் தொண்டூழியம் செய்யத் தொடங்கினேன். நான் தேசிய இளையர் சாதனையாளர் விருதைப் பெற விரும்பினேன், அதற்கு வெவ்வேறு திட்டங்களில் பல மணிநேரம் செலவிட வேண்டியிருந்தது. அதன் பிறகு, நானே தொடர்ந்து தொண்டூழியம் செய்து வருகிறேன், ஏனென்றால் அதனை வளப்படுத்தும் அனுபவமாகக் கருதுகிறேன்.
நீங்கள் ஏன் டிமென்ஷியா சிங்கப்பூரில் (DSG) தொண்டூழியம் செய்ய முடிவு செய்தீர்கள்?
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில், நாங்கள் ஜூரோங் பாயிண்ட் நியூ ஹாரிஸான் நிலையத்தில் (Jurong Point New Horizon Centre) DSG உடன் ஒரு திட்டத்தை மேற்கொண்டோம். அப்போது நான் கடந்து வந்த அனுபவம், எனது தொண்டூழிய முயற்சிகள் அங்கிருந்த தாத்தாக்கள் மற்றும் அத்தைகளுக்கு எவ்வாறு உதவக்கூடும் என்பதையும், எதிர்காலத்தில் எனது வாழ்க்கைக்கு அவை எவ்வாறு பொருத்தமாக இருக்கலாம் என்பதையும் புரிந்துகொள்ள உதவியது – முதுமைக்கால மறதி நோய் என்பது மூத்தோர்களுக்கு மட்டும் ஏற்படும் மருத்துவ நிலை அல்ல. இளம் வயதிற்குள் ஏற்படும் முதுமைக்கால மறதி நோயும் உள்ளது, அது இளம் வயதினரிடையே ஏற்படுகிறது. டிமென்ஷியா சிங்கப்பூரில் நான் உதவிப்பணி செய்தபோது, டிமென்ஷியாவைப் பற்றியும், அது ஏற்படும் அபாயத்தைக் குறைப்பது பற்றியும் என்னால் நிறைய புரிந்துகொள்ள முடிந்தது. இங்கு தொண்டூழியம் செய்வது, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒரு நபராக இருப்பது எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளவும், அவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்பதற்கும் எனக்கு உதவுகிறது.
டிமென்ஷியா சிங்கப்பூரில் தொண்டூழியம் செய்யும் அனுபவம் உங்களுக்கு எப்படி இருக்கிறது?
எனக்கு அங்கு கிடைக்கும் அனுபவம் நன்றாக உள்ளது என்று சொல்வேன், ஏனென்றால் நான் ஏதாவது கருத்து சொன்னால், அது கருத்தில் கொள்ளப்படுகிறது. அந்த அமைப்பின் உறுப்பினர் போல நான் மதிக்கப்படுகிறேன். இத்தகைய நிலையங்களில் தொண்டூழியம் செய்வது, முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுடன் தொடர்புகொள்வதில் எனக்கு நேரடி அனுபவத்தை அளித்துள்ளது, இது நான் பெறுவதற்குரிய மிகவும் நல்ல திறமையாகும்!
எங்களுடன் தொண்டூழியம் செய்ததிலேயே உங்களுக்கு மறக்கமுடியாத ஒரு அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
ஜூன் மாதம் ஜூரோங் பாயிண்ட்டில் ஒரு தொண்டூழிய அமர்வின்போது, மாணவர்கள் குழுவுடன் ஒரு செயல்பாட்டை நடத்த நான் உதவி செய்து கொண்டிருந்தபோது, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒரு பெண்மணி எங்களுடன் பேசத் தொடங்கினார். அவர் தனது கடந்த காலம், கல்வி மற்றும் பலவற்றைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டார். அந்த நாளில் இவ்வளவு பெரிய அளவிலான தகவல் பரிமாற்றம் இருக்கும் என்று நான் எதிர்பார்க்காததால், அது எனக்கு மிகவும் செறிவூட்டும் அனுபவமாக இருந்தது. அந்த அனுபவம், முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்கள் மற்ற அனைவரையும் போலவே இருக்கிறார்கள் என்பதை எனக்கு நினைவூட்டியது. அவர்களுக்கு அவ்வப்போது சில நேரங்களில் மறதி இருக்கலாம், ஆனால் அவர்களுக்கும் சொல்வதற்கு அவர்களின் வாழ்க்கைக் கதைகள் உள்ளன, மேலும் இந்தக் கதைகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நம்மிடம் இன்னும் எதிரொலிக்கின்றன.
டிமென்ஷியா சிங்கப்பூரின் முதல் இளையர் சமூகத் தலைவராக இருப்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
உண்மையாக சொன்னால், முதல் இளையர் சமூகத் தலைவராக இருப்பதில் சில எதிர்பார்ப்புகள் மற்றும் தரநிலைகள் இருக்கின்றன. ஒரு தலைவராக இருப்பது என்பது ஒரு அமர்வில் உதவி செய்துவிட்டு வீட்டிற்குச் செல்வது மட்டுமல்ல. அங்குள்ள ஊழியர்கள் அல்லது அந்த அமைப்பை எவ்வாறு மேலும் வளர்ச்சியடைய செய்யலாம் என்பது குறித்து உதவுவதைப் பற்றியது, எடுத்துக்காட்டாக ஒரு திட்டத்தை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வதற்கு உதவ வேண்டும். இருப்பினும், எனக்கு உதவுவது பிடிக்கும் என்பதால் இது சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.
ஒரு இளையர் தொண்டூழியராகவும், இளையர் சமூகத் தலைவராகவும் நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்?
டிமென்ஷியா சிங்கப்பூரின்(DSG) இளையர் சமூகத் தலைவராக, முதுமைக்கால மறதி நோயுள்ளோரை உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்கான இந்த அமைப்பின் தொலைநோக்குப் பார்வையை அடைய நான் உதவ விரும்புகிறேன். இது ஒரு புதிய திட்டம் என்பதால் இந்தப் பங்கை உறுதிப்படுத்த உதவ விரும்புகிறேன். எதிர்கால இளையர் சமூகத் தலைவர்கள், தங்கள் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், மாற்றத்தை ஏற்படுத்த அதிகாரம் பெற்றவர்களாக உணருவார்கள் என்று நம்புகிறேன்.
ஒரே வார்த்தையில், டிமென்ஷியா சமூகம் குறித்து இதுவரை உங்களுக்கு ஏற்பட்ட தாக்கத்தை எவ்வாறு விவரிப்பீர்கள்?
சரி, இதை ஒரு வார்த்தைக்குள் சுருக்கிக் கூறுவது கொஞ்சம் கடினம், ஆனால் நான் ஒரு வார்த்தையை தேர்வு செய்ய வேண்டியிருந்தால், அது ‘ஆதரவளித்தல்’ என்பதாக இருக்கும். டிமென்ஷியா திட்டத்தை ஆதரிப்பதற்கும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு உதவுவதற்குமான எனது வழி, தொண்டூழியம் செய்வதும் எனது அறிவை சக இளையர்களுக்குப் பகிர்வதும் ஆகும்.
அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் டிமென்ஷியா (முதுமைக்கால மறதி நோய்) துறையில் என்ன மாற்றங்களை எதிர்பார்க்கிறீர்கள்?
இரண்டு விரிவான பிரிவுகளில் மாற்றங்களைக் காணுவேன் என்று நான் நம்புகிறேன்: ஒன்று பராமரிப்பு மற்றும் சிகிச்சை, மற்றொன்று விழிப்புணர்வு மற்றும் களங்கம் நீங்குதல். முதலில் பராமரிப்பு மற்றும் சிகிச்சையைப் பற்றி பேசுகிறேன். முதுமைக்கால மறதி நோய் பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சியை ஆதரிக்கும் வகையில் வலுவான கொள்கைகள் மற்றும் சட்டங்களில் மாற்றம் காண நான் விரும்புகிறேன். முதுமைக்கால மறதி நோய்க்கான ஆராய்ச்சியில் நாம் அதிக முதலீடு செய்தால், அதாவது அதிக நிதி வழங்கினால், அந்தப் பணம் ஆரம்பகால நோயறிதலுக்கு உதவும்.
அதே போல, சிகிச்சைகளை உருவாக்குவதற்கும் நாம் அதிக நிதியைச் செலவிடும்போது, முதுமைக்கால மறதி நோய்க்கு ஒரு சிகிச்சையைக் கூட நாம் கண்டுபிடிக்கலாம்! நமக்குத் தெரியும், தற்போது முதுமைக்கால மறதி நோய்க்கு எந்தச் சிகிச்சையும் இல்லை, மேலும் இந்த நோய் உள்ளோருக்கு ஒரு பராமரிப்பாளராக இருப்பதும் எளிதானது அல்ல. இந்த நிதியில் ஒரு பகுதியை பராமரிப்பாளர்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவதற்காக செலவிடலாம்.
முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களின் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பிலும் தொழில்நுட்பத்தை நம்மால் ஒருங்கிணைக்க முடியும். உதாரணமாக, நியூ ஹாரிஸன் நிலையங்களில் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களைப் பராமரிப்பது தற்போது மிகவும் உழைப்பு மிகுந்ததாக உள்ளது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அங்குள்ள ஊழியர்களின் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு பணிச்சுமையைக் குறைக்கலாம். நோயாளியை மையமாகக் கொண்ட பராமரிப்பை அடைய தொழில்நுட்பம் உதவக்கூடும். இனிவரும் காலங்களில், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு அந்தப் பராமரிப்பு இன்னும் பிரத்யேகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
பராமரிப்பு மற்றும் சிகிச்சையைப் பொறுத்தவரையில், முதுமைக்கால மறதி நோயுள்ளோர் சமூகத்துடன் ஈடுபட கூடுதல் ஆதரவு கட்டமைப்புகள் ஏற்படும் என்று நம்புகிறேன்.
எனது இரண்டாவது விரிவான பகுதி விழிப்புணர்வு மற்றும் களங்கம் நீக்கம் – கூடுதல் பொது விழிப்புணர்வு ஏற்படும் நான் நம்புகிறேன், இதைத்தான் டிமென்ஷியா சிங்கப்பூரும் அடைய விரும்புகிறது. முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளை அடையாளம் காணவும், முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களை அதிகமாக ஏற்றுக்கொள்ளவும் பொதுமக்களுக்கு நாம் தொடர்ந்து எடுத்துரைக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், முதுமைக்கால மறதி நோய் மீதான களங்கத்தை நாம் குறைக்கலாம். சில நேரங்களில், மக்கள் முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்கள் தங்களிடமிருந்து வித்தியாசமாக நடந்துகொள்வதைப் பார்த்து சிரிக்கலாம், ஏனெனில் அவர்கள் அதை வேடிக்கையாக நினைக்கிறார்கள். ஆனால் முதுமைக்கால மறதி நோய் பற்றி அறிந்த பிறகு, அவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டால், முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களிடம் அவர்கள் அதிக பரிவுணர்வுடன் நடந்துக் கொள்ளலாம். எனவே, முதுமைக்கால மறதி நோயின் களங்கம் குறையும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
தனிப்பட்ட முறையில், உங்களுக்கென்று என்ன கனவுகள் மற்றும் அபிலாஷைகள் உள்ளன?
எனக்கு பல கனவுகள் உள்ளன! நான் ஓர் இளைய நபர், சமூக சேவை தொடர்பான பல லட்சியங்கள் எனக்கு உள்ளன. இதுவரை பல அமைப்புகளில் தொண்டூழியம் செய்த எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், குறிப்பாக சமூக சேவை பற்றி அறிய விரும்பும் சக இளையர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் எந்த நற்காரியத்தை ஆதரித்தாலும் சரி, அவர்கள் தங்களுக்கென சொந்த பாதையை வகுத்து, நமது சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த அவர்களுக்கு உத்வேகம் அளிப்பேன் என்று நம்புகிறேன், மேலும் இளையகளின் தொண்டூழியம் குறித்து நான் அதிகமாக எடுத்துரைக்க விரும்புகிறேன்.
இந்தக் கட்டுரை தெளிவுக்காக சற்று திருத்தப்பட்டுள்ளது.
டெர்ரென்ஸ் டிங்
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சுகாதார சேவைகள் மேலாண்மை பட்டயச் சான்றிதழ் பட்டதாரியான டெரன்ஸ், தற்போது தனது படை ஆட்சேர்ப்புத் திட்டத்தில் பணியாற்றி வருகிறார். தனது ஓய்வு நேரத்தில், சிங்கப்பூரில் டிமென்ஷியாவை உள்ளடக்கிய சமூகம் உட்பட பல்வேறு நற்காரணங்களுக்காக செயல்படும் திட்டங்களுக்கு தொண்டூழியம் செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு உதவுவதில் அவர் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார். தனது சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவேன் என்று அவர் நம்புகிறார்.