எங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுங்கள்

தனது தந்தை இறப்பதற்கு முன்பு அவருக்கு முதன்மைப் பராமரிப்பாளராக இருந்த சோபியா, முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுடன் தகவல் பரிமாறிக்கொள்ளும்போது உண்மைக்கு ஏற்ப நெழிவுசுளிவுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி சிந்திக்கிறார்.

நான் சிறுபிள்ளையாக இருந்தபோது, ​​சந்தையில் என் பெற்றோர் நடத்திய கடையில், அதுவும் குறிப்பாக பண்டிகைக் காலங்களில் உதவி செய்ய வேண்டியிருந்தது. தொடக்கப் பள்ளி மாணவியாக, என் மனசு எப்போதும் கடையில் நடக்கும் வியாபாரத்தின் மீதிருக்காது, நான் அடிக்கடி பொம்மைகளைப் பார்ப்பதற்கு ஒழிந்துக்கொண்டு செல்வேன். ஒரு நாள் பகல் பொழுதில், அருகில் வணிக நிலையத்தில் இருந்த ஒரு கவரும்விதமான கதைப்புத்தகம் என் கண்ணில் பட்டது. அதில் வண்ணமயமான விளக்கப்படங்களும் அழகான கதாபாத்திரங்களும் நிரம்பியிருந்தது, என்னால் அதை கீழே வைக்கவே முடியவில்லை.

அந்த ஆசையை அடக்க முடியாமல், எங்கள் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த $5 எடுத்துக்கொண்டு அதை வாங்க ஓடினேன். ஆனால் அது என்  அம்மாவின் கவனத்திற்குச் செல்லாமல் இல்லை, குறிப்பாக புதிதாக வாங்கிய கதைப்புத்தகத்தை மறைக்கவோ அல்லது அது எங்கிருந்து வந்தது என்பதை விளக்கவோ எனக்கு வழி இல்லாதபோது அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன். வீடு திரும்பியதும், திருடியதற்காக எனக்கு பிரம்படி கிடைத்தது, இனி ஒருபோதும் திருடவோ பொய் சொல்லவோ மாட்டேன் என்று வாக்குறுதியளித்தேன்.

நான் பெரியவளாகியபோது, ​​பெரியவர்களின் உலகில் ‘உண்மை’ என்பதன் விளக்கம் பல்வேறு மட்டங்களில் இருப்பதை அறிந்துகொண்டேன். சிலர் ‘உண்மையை பளிச்சென்று சொல்ல மாட்டார்கள்’, சிலரோ பேசும்போதெல்லாம் உண்மையை வெளிப்படையாக புண்படும்படி பேசிவிடுவார்கள். இப்போதும் ஒரு நடுத்தர வயது நபராக, வெவ்வேறு நபர்களுடன் சமூக சார்ந்து உண்மையாக இருப்பதில் சிக்கலான அடுக்குகளை அணுகும்போது நான் கவனமாக இருக்க வேண்டும். என் பெற்றோரிடம், சில சமயங்களில் நான் செய்யும் தவறுக்கு சாதுர்யமாக நடந்துள்ளேன், ஏனென்றால் வீட்டில் ஒருவர் உண்மையை அப்படியே பேச முடியும் என்று நான் நினைத்தேன்!

என் பெற்றோர் முதுமை அடையும்போது இந்த நம்பிக்கை கடுமையாக சோதிக்கப்படும் என்று எனக்குத் தெரியாது. உதாரணமாக, என் தந்தைக்கு 70களின் பிற்பகுதியில் மறதி அதிகமாகிக் கொண்டே போனது. ஒரு சமயம், ஒரே நாளில் மூன்று அல்லது நான்கு முறை நான் சாப்பிட்டேனா என்று அவர் கேட்பார். நான் அவரைப் பார்த்து, “அப்பா, இதே கேள்வியை எத்தனை முறை என்னிடம் கேட்பீர்கள்?” என்று கத்தியபோது, எனக்கு அவர் மிகுந்த ஆச்சரியத்துடன் பதிலளித்தார். இறுதியாக, என் நண்பர்தான் அவருக்கு முதுமைக்கால மறதி நோய் இருக்கலாம் என்று எனக்கு காட்டினார்.

2018 ஆம் ஆண்டு அவர் கடுமையாக கீழே விழுந்தபோது, அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருந்தது. அப்போது அங்குள்ள மருத்துவரிடம் இவருக்கு முதுமைக்கால மறதி நோய்க்கான பரிசோதனையை செய்துப்பார்க்கும்படி கேட்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இறுதியில் அவருக்கு ஆல்சைமர் நோய் இருப்பது கண்டறியப்பட்டது, இதுவே அவர் முன்பை விட அதிகமான மறதியுடனும் கடுமையான குணாதிசயங்களுடனும் மாறியதற்கான காரணத்தை விளக்கியது. பணத்தை எண்ணுவதில் தவறு செய்வதாலும், சமூக ஒழுக்க நெறிகளை மறந்துவிடுவதாலும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை அவர் புண்படுத்துவதாக என் அம்மா புகார் கூறினார்.

நவம்பர் 2019 இல், என் தந்தைக்கு பெரியளவில் பக்கவாதம் ஏற்பட்டது, இது அவரது நிலைமையை மோசமாக்கியது. அவரை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருந்தது, என் குடும்பத்தினர் அவருக்கு வீட்டுப் பராமரிப்பை வழங்குவதைப் பற்றி யோசிக்கத் தொடங்கினர். படுக்கைக்குச் செல்வதற்கு முன் தனது பற்களை எப்படி அகற்றுவது என்பதை அவர் மறந்துவிட்டார், என்னை என் அம்மா என்று தவறாக நினைத்துக்கொள்வார், ஜன்னலுக்கு வெளியே பார்த்தபோது திபெத் என்ற இடத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக அவர் நம்பினார். என்னை வளர்த்தபோது என் தந்தை எப்படி இருந்தாரோ, அந்த நபரின் குணாதிசயங்கள் சரிவடைவதைப் பார்ப்பது எனக்குக் கஷ்டமாக இருந்தது. ஒரு நாள், தாதியர் என்னை தொலைபேசியில் அழைத்து, “குழந்தைப் பருவத்தில் தான் இருந்த சீனாவைத் தேடுவதாக” கூறி என் தந்தை அழுததாகக் கூறினார், ஆனால் அவர் உண்மையில் பிறந்து வளர்ந்ததெல்லாம் சிங்கப்பூர்தான். அவர் தனது ஆரம்ப காலம் குறித்து குழப்பமடைந்து உணர்ச்சிவசப்படுவதைக் கேட்பது மிகவும் வேதனையாக இருந்தது.

ஒரு நாள் காலை, நான் என் தந்தையை மருத்துவமனையில் பார்க்கச் சென்றபோது, ​​அவர் என்னிடம், “உன் இரண்டாவது மாமா எங்கே?” என்று கேட்டார். அவர் மிகவும் என் தந்தைக்கு நெருக்கமாக இருந்த அவரது தம்பி, அவர் சில வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இவ்வளவு முக்கியமான நிகழ்வை அவரால் இனி நியாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாது என்பதை நான் உணர்ந்தபோது என் இதயம் மிகவும் வேதனையடைந்தது, உண்மையைச் சொல்வது அவரை மிகுந்த அதிர்ச்சிக்கும் துக்கத்திற்கும் உள்ளாக்கும் என்றும் நான் கவலைப்பட்டேன். மறுநாள் அவர் அதே கேள்வியை என்னிடம் கேட்டு, தனது சகோதரர் ‘திடீரென்று’ இறந்துவிட்டார் என்று மீண்டும் மீண்டும் வருத்தப்பட்டால் என்ன செய்வது?

“ஓ, இரண்டாவது மாமா அவருடைய கடையில் வேலையாக இருக்கிறார். இன்று வந்து உங்களைப் பார்க்க அவருக்கு நேரம் இல்லை ”, என்று நான் பொய் சொல்லிவிட்டேன். இன்று கூட அந்தத் தருணம் எனக்குத் தெளிவாக நினைவில் இருக்கிறது. அவரைக் காயப்படுத்தாமல் இருக்க இந்தத் தீங்கற்ற பொய்யைச் சொல்லிவிட்டு, முடிந்தவரை சாதாரணமாகப் பேச முயற்சித்தாலும், என் முகம் குற்ற உணர்ச்சியால் எரிந்து கொண்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, என் தந்தையை வீட்டிற்கு அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றினேன். மருத்துவமனையை மாற்றுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவருக்கு மற்றொரு பெரிய பக்கவாதம் ஏற்பட்டது, அவர் அப்போது தனது சகோதரரைப் பற்றி மீண்டும் குறிப்பிட்டார்: “உங்க ரெண்டாவது மாமா என்னை உடை உடுத்தி, காலை உணவு சாப்பிட்டுவிட்டு, அவரோடு செல்ல தயாராக இருக்கச் சொன்னார்.” 2019 நவம்பர் 27 ஆம் தேதி அதிகாலையில், என் தந்தை மருத்துவமனையில் காலமானார், எங்கள் குடும்பத்தினர் அவருக்குப் பக்கத்தில் இருந்தனர்.

பரிவுடன் தகவல் பரிமாறிக் கொள்ள இளையர்களுக்கு வழிகாட்டுதல்

முதுமைக்கால மறதி நோய் உள்ள ஒருவரைப் பராமரித்ததில் எனக்குக் கிடைத்த அனுபவம், இறுதியில் இளையர்களைச் சென்றடையும் நலத் திட்டத்தில் டிமென்ஷியா சிங்கப்பூருக்காக பணிபுரிய என்னைத் தூண்டியது. சில நேரங்களில் நான் மாணவர் தொண்டூழியர்களுடன் எங்கள் நியூ ஹாரிஸான் நிலையங்களுக்குச் (New Horizon Centre) செல்கிறேன், அங்கு அவர்கள் பள்ளி செல்லும் வயதுடைய பல பிள்ளைகளுக்குப் பரிச்சயமில்லாத, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் மூத்தவர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

எங்களின் தொண்டூழிய விளக்க அமர்வுகளின்போது, ​​முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுடன் தகவல் பரிமாறிக்கொள்ளும்போது ‘செய்ய வேண்டியவை’ மற்றும் ‘செய்யக்கூடாதவை’ குறித்து மாணவர்களுக்கு நாங்கள் எடுத்துக் கூறுகிறோம். திரும்பத் திரும்ப வரும் வாக்கியங்களை ஒரு புதிய உரையாடலாகக் கருதுவதும், சங்கடமான உரையாடல்களை எவ்வாறு திசைத்திருப்புவதும் பற்றி சொல்லிக்கொடுப்பது இதில் அடங்கும். எனது தனிப்பட்ட அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், எனவே அவர்கள் முதுமைக்கால மறதி நோயுள்ளவர்களிடம் பேசும்போது, ​​”உண்மையை வளைக்கும்” நடத்தைகளை அவர்கள் கவனித்தாலும், என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியும், மேலும் அவர்கள் அமைதியான முறையிலும் எதிர்வினையாற்றுவார்கள். கலை மற்றும் கைவினைச் செயல்பாட்டின்போது முதுமைக்கால மறதி நோயுள்ளவர் ஒரு பாண்டாவிற்கு மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தை பயன்படுத்த முடிவு செய்தால், பாண்டா வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதைக் காட்டிலும், அந்த நபரின் முடிவின்படியே செல்வது குறைவான மன அழுத்தத்தை ஏற்படுத்தும்!

ஒரு வகையில், தேவையில்லாமல் வேறொருவருக்கு வலியையும் துக்கத்தையும் ஏற்படுத்தும் முழுமையான உண்மையை வலியுறுத்துவதற்குப் பதிலாக, விஷயங்களை எப்படி அப்படியே கடந்துசெல்வது என்பதைக் கற்றுக்கொள்வதற்கான பயனுள்ள பாடமாக இது அமையும்.

அநேகமாக, என் தந்தை இறப்பதற்கு முன்பு அவரிடம் உண்மையானவராக நடந்துக் கொள்ளாமல் இருந்ததற்காக என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்வதற்கான ஒரு வழியாகவும் இது இருக்கலாம். நான் கூறிய தீங்கற்ற பொய்யை அவர் மன்னித்திருப்பார் என்று நம்புகிறேன்.

எழுத்தாளர் பற்றி

blank
SOPHIA TAN

சோபியா டான் என்பவர் ஒரு முன்னாள் ஆசிரியர், அவர் கல்வி அமைச்சின் பள்ளிகள், செறிவூட்டல் நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகத்தில் கற்பித்துள்ளார். தனது மறைந்த தந்தைக்கு ஆல்சைமர் நோய் ஏற்பட்டபோது, ​​அவர் இரண்டு ஆண்டுகள் தனது தந்தையைப் பராமரித்தார். தனது ஓய்வு நேரத்தில், அவருக்குப் படிப்பது, பயணம் செய்வது மற்றும் புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வது பிடிக்கும். அவர் ஒரு நாள் ஒரு கதைப்புத்தகத்தை வெளியிடுவேன் என்று நம்புகிறார். 

பிரிவுகள்
குறிச்சொற்கள்
#DESPITEDEMENTIA (4) Art (1) BPSD (1) Dementia Care Mapping (1) Emily Ong (4) Intellectual Disability (1) Types of Dementia (2) Up Close (1) VOICES FOR HOPE (3) Youth Community Leaders (1) அன்றாட வாழ்வின் செயல்பாடுகள் (1) அறிகுறிகள் (1) அறிவிப்பு (1) இளைஞர் மற்றும் டிமென்ஷியா (2) ஒரு சமூகம் அல்லது நிறுவனத்தின் உறுப்பினர் (1) கவனிப்பு (2) குய்டடோர்ஸ் (5) சுதந்திரமாக வாழ்வது (4) டிமென்ஷியா அபாயத்தைக் குறைத்தல் (1) டிமென்ஷியா உள்ளடக்கிய சூழல் (3) டிமென்ஷியா வளர்ச்சி (4) டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட ஒரு அன்புக்குரியவரை கவனித்துக்கொள்வது (24) டிமென்ஷியாவுடன் என் வாழ்க்கை (0) டிமென்ஷியாவுடன் நன்றாக வாழ்வது (5) டிமென்ஷியாவுடன் வாழும் நபர் (6) டிமென்ஷியாவைப் புரிந்துகொள்ளுதல் (10) தனிப்பட்ட கதைகள் (1) திட்டங்கள் மற்றும் சேவைகள் (2) திரைப்படத்தில் டிமென்ஷியா (0) தொடர்பு மற்றும் தொடர்பு (2) நடத்தை மாற்றங்களுக்கு பதிலளித்தல் (9) நபர்-மைய பராமரிப்பு (2) நிதி மற்றும் சட்ட ஆதரவு (5) நோயறிதலை ஏற்றுக்கொள்வது (2) பராமரிப்பாளர்களுக்கு ஆதரவு (2) பராமரிப்பாளர் சுய கவனிப்பு (3) பராமரிப்பு நிபுணர் (8) பராமரிப்பைத் திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் (3) மனிதநேயம். (0) மருந்துகளின் மேலாண்மை (1) மிதமான மறதி நோய் (2) லேசான மறதி நோய் (2) வழி கண்டறிதல் (2) வாதாடுதல் (3) 初期失智症 (2)
Skip to content