முதுமைக்கால மறதி நோய் பராமரிப்பில் வாழ்க்கைக் வரலாற்றை உருவாக்கும் பணி ஏற்படுத்திடும் சக்திவாய்ந்த தாக்கத்தை அறிந்திடுங்கள். முதுமைக்கால மறதி நோயுள்ள நபர்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் அவர்களின் தனிப்பட்ட கதைகளைச் சேகரித்து, அது குறித்து சிந்திப்பது எவ்விதம் அடையாளத்தை வளப்படுத்துகிறது, பரிவை ஆழப்படுத்துகிறது மற்றும் அர்த்தமுள்ள பந்தங்களை வளர்க்கிறது என்பதை இந்தக் கட்டுரை ஆராய்கிறது.
வாழ்க்கை வரலாறு என்றால் என்ன?
ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கென தனித்துவமான வாழ்க்கை வரலாறு இருக்கும். நமது வாழ்க்கை அனுபவங்கள், நம்பிக்கைகள், விருப்பு வெறுப்புகள் நம்மைத் தனிமனிதர்களாக வடிவமைக்கின்றன. வாழ்க்கை வரலாற்றை உருவாக்கும் பணி என்பது ஒரு நடவடிக்கை ஆகும், இதில் முதுமைக்கால மறதி நோயுள்ள ஒருவர் அவரது கடந்த கால விஷயங்களைச் சேகரித்து பரிசீலிக்க குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் வசதி செய்கின்றனர். வாழ்க்கை வரலாற்றை உருவாக்கும் பணியில் ஈடுபடும் செயல்முறையானது, அந்த நபர் தனது கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் உணர்வை மேம்படுத்தவும் உதவுகிறது1.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களும் அவர்களின் வாழ்க்கை வரலாறும்
முதுமைக்கால மறதி நோய் முன்னேறும்போது, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு தகவல் பரிமாற்றப் பிரச்சினைகள் மற்றும் நினைவுத்திறன் இழப்பு ஏற்படும். முதுமைக்கால மறதி நோயுள்ள ஒருவரைப் பராமரிக்கும்போது, அவரைப் பற்றிய தனிப்பட்ட விவரிப்புகள் மற்றும் அவரின் கடந்தகால வாழ்க்கை வரலாற்றை அறிவதானது, பராமரிப்பாளரின் பரிவை அதிகரிப்பதாகவும், நபர் சார்ந்த பராமரிப்பை உறுதிசெய்வதாகவும் காணப்படுகிறது2.
வாழ்க்கை வரலாறு வளஆதாரத்தை உருவாக்குவதன் நோக்கம் என்ன?
- குடும்ப உறுப்பினர்கள் மற்றும்/அல்லது பராமரிப்புப் பணியாளர்களுக்கு அந்த நபரைக் கண்டறிய ஒரு வழிகாட்டியை வழங்குகிறது;
- வாழ்க்கை சாதனைகள், சிறப்பு நிகழ்வுகள், விடுமுறை நாட்கள் மற்றும் அந்த நபருக்கு வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பிற நிகழ்வுகளைக் கொண்டாட இயலுகிறது;
- மன தூண்டுதலை ஊக்குவித்து, ஆதரிக்கிறது;
- உணர்ச்சி ரீதியான ஆறுதலையும் மகிழ்ச்சியையும் வழங்குகிறது;
- மிகவும் துடிப்புமிக்க மற்றும் தெளிவான கடந்த கால நினைவுகளைப் பற்றிய அர்த்தமுள்ள உரையாடல்களில் அந்த நபரை ஈடுபடுத்த உதவுகிறது;
- முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு இடையே சமூக தொடர்புகளை ஊக்குவிக்கிறது;
- முதுமைக்கால மறதி நோயுள்ள நபர், மற்ற நபர்கள், நிகழ்வுகள் மற்றும் சுற்றுச்சூழலில் நிலவும் சத்தங்களால் உணர்ச்சிவசப்பட்டால், அவரை அமைதிப்படுத்த அர்த்தமுள்ள தொடர்புகளை வழங்குகிறது;
- புதிய மற்றும் அறிமுகமில்லாத சூழலில் (மருத்துவமனை, தாதிமை இல்லத்திற்குச் செல்வது, உடை மாற்றும் அறைகள் போன்ற சூழலில்) முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபருக்கு ஆதரவளிக்கும் வகையில் அவரின் கவனத்தைத் திருப்பும் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது3.
வாழ்க்கை வரலாறு வளஆதாரத்தை உருவாக்குதல்
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரைப் பற்றிய தகவல்களை அவரது குடும்ப உறுப்பினர்கள், பராமரிப்பு ஊழியர்கள், வழக்கு கோப்புகளிலிருந்து அல்லது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் அந்த நபரிடமிருந்தே நேரடியாக தகவல்கள் சேகரிக்கவும்.
பழைய புகைப்படங்கள், நினைவுப் பொருட்கள், தடிமனான கோப்புகள், வண்ணத் தாள்கள், அலங்காரப் பொருட்கள், வண்ண பென்சில்கள், பெயிண்ட், பசை, கத்தரிக்கோல் மற்றும் தெளிவான கோப்புறைகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு வாழ்க்கை வரலாற்று செய்திகள் இடம்பெறும் ஆவணங்களைத் தயாரிக்கவும்.
வாழ்க்கை வரலாற்றுச் செய்தியில் சேர்ப்பதற்குப் பரிந்துரைக்கப்படும் தலைப்புகள்:
- என்னைப் பற்றி – தனிப்பட்ட சுயவிவரம்
- பிடித்த உணவு
- தொழில்
- வீடு
- குழந்தைப்பருவம்
- பிடித்த உருவச்சிலை
- பயணம்
- பணி ஓய்வு
- உறவுகள் – குடும்பம் மற்றும் நண்பர்களுடனான முக்கிய உறவு
- மரபு
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும் சோகமான அல்லது அதிர்ச்சிகரமான நிகழ்வுகளை அனுபவித்திருந்தால், அந்த வாழ்க்கை நிகழ்வுகளை மீண்டும் நினைவுப்படுத்தும் விஷயங்களை நீங்கள் தவிர்க்க விரும்பலாம். இருப்பினும், குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிற பராமரிப்பாளர்களுக்கு வழங்கக்கூடிய தனி ஆவணத்தில் இவற்றை விளக்குவது உதவியாக இருக்கும், இதன் மூலம் நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்கள் கடந்த காலத்தில் நடந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்வுகளுடன் தொடர்புடையதா என்பதை அவர்கள் அடையாளம் காணலாம்.
ஒரு வாழ்க்கை வரலாறு எப்படி இருக்கும்?
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் ஒரு நபரின் வாழ்க்கை வரலாற்றைத் தயார் செய்யும்போது, அதனைப் பின்வரும் வடிவங்களில் ஒன்றாக அல்லது பின்வரும் வடிவங்களின் கலவையாக உருவாக்குவதைக் கருத்தில் கொள்ளலாம்:
- புத்தகம்
- படத்தொகுப்பு
- காணொளிப் பதிவு
- நினைவுப் பெட்டி
- தனிப்பட்ட சுயவிவர ஆவணம்
- கைபேசி செயலி
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபருக்கு அர்த்தமுள்ள எந்த வகையிலும் வாழ்க்கை வரலாற்றை வடிவமைக்கலாம். இதை மெய்நிகர் வழியில் தயார் செய்ய விரும்புவோர் வாழ்க்கை முறை மற்றும் சமூக மின்னிலக்கத் தளமான CARA-ஐப் பயன்படுத்தி அவ்வாறு செய்யலாம், இது முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் மொபைல் செயலி மூலம் தீர்வுகளின் சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைவதற்கு எளிதான அணுகலை வழங்குகிறது. CARA ஒரு பராமரிப்பு வட்ட அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது குடும்ப பராமரிப்பாளர்கள் பகிரப்பட்ட குறிப்புகள் மூலம் ஒன்றிணைந்து செயல்பட்டு, நினைவுகளை உருவாக்கவும், முதுமைக்கால மறதி நோயுள்ள தங்கள் அன்புக்குரியவரின் வாழ்க்கைக்கு மதிப்பளித்து கொண்டாடவும் அனுமதிக்கிறது. இந்த நினைவுப் பதிவுகளை பிரத்யேக உள்ளடக்கமாகப் பயன்படுத்தலாம், இது முதுமைக்கால மறதி நோயின் பயணம் முழுவதும் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு தொடர்புகளையும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. பராமரிப்பு வட்டத்தைப் பற்றி இங்கே மேலும் அறிக.
இருப்பினும், நீங்கள் மிகவும் கட்டமைக்கப்பட்ட டெம்ப்ளேட்டைத் தேடுகிறீர்கள் என்றால், பின்வரும் ஆதாரவளங்களைப் பார்வையிடலாம்:
Life Story Template
Source: Dementia UK
Dementia UK இன் வாழ்க்கை வரலாற்று டெம்ப்ளேட்என்பது குறிப்பாக முதுமைக்கால மறதி நோயுள்ளவர்களின், தனிப்பட்ட வரலாறுகளைப் பதிவு செய்வதற்கான ஒரு நடைமுறை கருவியாகும். இது எளிதாக ஆவணப்படுத்துவதற்குத் தனிப்பயனாக்கக்கூடிய பிரிவுகளையும் நேரடியான அணுகுமுறையையும் வழங்குகிறது. இன்றே உங்கள் கதையை உருவாக்கத் தொடங்குங்கள்.
This is Me Template
Source: Alzheimer Society
This is me என்பது வாழ்க்கை வரலாற்றை உருவாக்கும் பணிக்கான ஒரு கருவியாகச் செயல்படுகிறது, இது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரின் பின்னணி, விருப்பத்தேர்வுகள் மற்றும் குறிப்பிடத்தக்க வாழ்க்கை நிகழ்வுகள் பற்றிய முக்கியமான விவரங்களைப் பதிவு செய்ய பராமரிப்பாளர்களுக்கு உதவுகிறது. This is me என்பதைப் பயன்படுத்துவதன் மூலம், சுகாதாரம் மற்றும் சமூகப் பராமரிப்பு வல்லுநர்கள் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபரைப் பற்றிய ஆழமான புரிதலின் அடிப்படையில் மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் கவனமுள்ள பராமரிப்பை வழங்க முடியும்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களை வாழ்க்கை வரலாறு ஆதாரவளத்தை உருவாக்குவதில் எவ்வாறு ஈடுபடுத்துவீர்கள்?
முதுமைக்கால மறதி நோயுடன் நபரை இயலுமானவரை ஈடுபடுத்துவது, வாழ்க்கை வரலாறு அந்த நபரின் விருப்பங்களையும் முன்னுரிமைகளையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்து, உரிமை உணர்வை ஊக்குவிக்கிறது. முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர் தனது வாழ்க்கை வரலாறு வளஆதாரம் உருவாக்கப்படுவதன் நோக்கம் குறித்து மிகவும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். வாழ்க்கை வரலாற்று வளஆதாரத்தில் இடம்பெறும் விஷயங்கள், அதை இப்போதும் எதிர்காலத்திலும் யார் பார்க்கலாம் என்பது குறித்து அவர்கள் கொண்டிருக்கும் விருப்பங்களுக்கு மதிப்பளிக்கவும்.
தேவைப்படும் இடங்களில் அவரை ஈடுபடுத்தி அவருக்கு உதவுங்கள், மேலும் சேகரிக்கப்பட்ட தகவல்களை எழுதுங்கள் அல்லது தட்டச்சு செய்யுங்கள், இதன் மூலம் அவர்கள் உங்களுடன் சேர்ந்து வாழ்க்கை வரலாற்று கதை எவ்வாறு உருவாகிறது என்பதைக் காண முடியும். அவர்களிடம் அதிகப்படியான கேள்விகள் கேட்காமலிருக்க முயற்சி செய்யவும். விளக்கமாக பதிலளிக்கும் கேள்விகளைக் கொண்டு உரையாடல்களைத் தொடங்குவது எளிதாக இருக்கலாம். உதாரணமாக, “நீங்கள் வளர்ந்த இடம் பற்றி பகிர்ந்து கொள்ள முடியுமா?” என்று நீங்கள் கேட்கலாம்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுடன் பயனுள்ள தகவல் பரிமாற்றம் மேற்கொள்வது பற்றி இங்கே மேலும் அறிக.
ஒரு நபரின் வாழ்க்கை வரலாற்றை உருவாக்க நாட்கள், வாரங்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கூடுதல் தகவல்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், தேவைப்பட்டால் முக்கிய தகவல்களை வழங்க மற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் கேட்டறியவும். ஒருவரின் வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பது உணர்ச்சிவசப்பட வைக்கலாம் என்பதால், கவனத்துடன் கையாள நினைவில் கொள்ளுங்கள்.
முடிவுரை
வாழ்க்கை வரலாற்று வளஆதாரம் இத்துடன் நின்றுவிடுவதில்லை. இது மீண்டும் சொல்லப்படலாம், எனவே இது முடிக்கப்படாமல் உள்ளது. முதுமைக்கால மறதி நோய் பயணத்தின் ஆரம்பத்திலேயே வாழ்க்கை வரலாற்றை உருவாக்கும் பணியைத் தொடங்கினால் அது வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது. முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுடனான உரையாடல்கள் தொடருகையில், அக்கதைகளையும் தகவல்களையும் தொடர்ந்து சேருங்கள்.
Tell us how we can improve?
- Thompson,R. (2011). Using life story work to enhance care. Nurs Older People. 23(8): 16-21. doi: 10.7748/nop2011.10.23.8/16.c8713.
- Doran, C., Noonan, M., Doody, O. (2019). Life-story work in long-term care facilities for older people: An integrative review. J Clin Nurs. 28(7-8):1070-1084. doi: 10.1111/jocn.14718.
Dementia UK, (n.d). Creating a ‘Life Story’ Caring for someone with dementia (n.d.). Retrieved from: https://www.dementiauk.org/wp-content/uploads/dementia-uk-creating-a-life-story.pdf

