எங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுங்கள்
VD Tamil Upload
சிங்கப்பூரில் இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோய் (வாஸ்குலர் டிமென்ஷிய) மிகவும் பொதுவான முதுமைக்கால மறதி நோய் வகைகளில் ஒன்றாகும். உண்மையில், சிங்கப்பூரில் முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களில் 45.5% அல்லது கிட்டத்தட்ட பாதி பேர் இந்த நோய் நிலையைக் கொண்டுள்ளனர்.1அது என்ன, அதன் அறிகுறிகள் மற்றும் ஆபத்து காரணிகள் என்ன மற்றும் இந்த வகை முதுமைக்கால மறதி நோயை உருவாக்கும் அபாயத்தை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்.

இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோய் என்றால் என்ன?

இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோய் என்பது இரத்த ஓட்டம் தொடர்பான மூளை பாதிப்பால் ஏற்படும் ஒரு வகை முதுமைக்கால மறதி நோயாகும். ‘வாஸ்குலர்’ என்ற சொல் இரத்த நாளங்களைக் குறிக்கிறது. 

இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோய் எவ்வளவு பொதுவானது?

சிங்கப்பூர் உட்பட உலகின் பல பகுதிகளில், ஆல்சைமர் நோய்க்குப் பிறகு இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோய் இரண்டாவது பொதுவான முதுமைக்கால மறதி நோய் வகையாகும். தேசிய நரம்பியல் கழகத்தின்படி (NNI), 2013 முதல் 2017 வரை NNI-இல் சிகிச்சை பெற்ற, 65 வயதுக்கு மேல் இருந்தபோது முதுமைக்கால மறதி நோய் ஏற்பட்ட நோயாளிகளில் 16% பேரும், அதே காலகட்டத்தில் NNI-இல் சிகிச்சை பெற்ற, 65 வயதுக்குக் குறைவாக இருந்தபோது முதுமைக்கால மறதி நோய் ஏற்பட்ட நோயாளிகளில் 19% பேரும் இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயைக் கொண்டிருந்தனர்.2

இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயின் முக்கிய அறிகுறிகள்

இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகள் மற்ற வகை முதுமைக்கால மறதி நோயாளிகள் அனுபவிப்பதைப் போலவே இருக்கும். வழக்கமான அறிகுறிகளில் அடங்குவன: 

  • மெதுவான சிந்தனை 
  • திட்டமிடுவதில் சிரமம் 
  • புரிந்துகொள்வதில் சிரமம் 
  • கவனம் செலுத்துவதில் பிரச்சினைகள் 
  • மனநிலை மற்றும்/அல்லது நடத்தை மாற்றங்கள் 
  • நினைவாற்றல் மற்றும் மொழிப் பிரச்சினைகள்
  • இயக்கம் மற்றும்/அல்லது சமநிலையில் பிரச்சினைகள்

அனுபவிக்கப்படும் அறிகுறிகள் சேதமடைந்த குறிப்பிட்ட மூளைப் பகுதிகளைப் பொறுத்ததாகும். உதாரணமாக, மொழியைப் புரிந்துகொள்ளத் தேவையான மூளைப் பகுதிகள் சேதமடைந்தால், இந்த வகையான மூளைப் பாதிப்பு உள்ள ஒருவருக்கு மற்றவர்கள் சொல்வதைக் கேட்பது அல்லது அவர்கள் படிப்பதைப் புரிந்துகொள்வதில் பிரச்சினை இருக்கலாம். 

நிகழக்கூடிய அறிகுறிகளின் குறிப்பிட்ட குழுக்களைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, கீழே உள்ள பிரிவுகளில் இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயின் காரணங்கள் பற்றி மேலும் படிக்கவும்.

அறிகுறிகள் எவ்வளவு விரைவாக உருவாகின்றன?

அறிகுறி உருவாகும் வேகமானது இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயின் காரணம், வகை மற்றும் தீவிரத்தைப் பொறுத்தது. 

இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகள் காலப்போக்கில் மெதுவாக உருவாகலாம், இது பொதுவாக நாள்பட்ட, மெதுவாக வளரும் இரத்த நாள சேதத்தால் முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் போது நிகழ்கிறது. 

மற்றவகையில், முதல் பக்கவாதம் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் பக்கவாதங்களுக்குப் பிறகு, அறிகுறிகள் திடீரென தோன்றலாம் அல்லது மோசமடையலாம். 

ஆல்சைமர் நோய் போன்ற பிற வகை முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளிலிருந்து இந்த அறிகுறிகள் வேறுபடுகின்றனவா?

இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகள் சிந்தனை வேகம் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றன.
நினைவாற்றல் இழப்பு மற்றும் மொழிப் பிரச்சினைகள் போன்ற சில அறிகுறிகள், இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயை விட ஆல்சைமர் நோயால் ஏற்படும். முதுமைக்கால மறதி நோயில் அதிகமாகக் காணப்படுகின்றன, எனினும் இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களும் அவற்றை அனுபவிக்கலாம். 

இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளுக்கும் பிற வகையான முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் முதுமைக்கால மறதி நோயின் லேசான நிலைகளில் மிகவும் தெளிவாகத் தெரியலாம். முதுமைக்கால மறதி நோய் முற்றும்போது, அனுபவிக்கப்படும் அறிகுறிகளின் வகைகள் விரிவடையக்கூடும், மேலும் இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளுக்கும் பிற வகையான முதுமைக்கால மறதி நோயிற்கும் இடையிலான வேறுபாடுகள் குறைவாகவே வெளியில் தெரியும்.  

கலவையான முதுமைக்கால மறதி நோய்: ஒன்றுக்கும் மேற்பட்ட வகையான முதுமைக்கால மறதி நோய்

ஒருவருக்குக் கலவையான முதுமைக்கால மறதி நோயும் ஏற்படலாம், இது ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வகையான முதுமைக்கால மறதி நோய் இருக்கும்போது ஏற்படுகிறது. கலப்பு முதுமைக்கால மறதி நோயின் பெரும்பாலான நிகழ்வுகள் ஆல்சைமர் மற்றும் இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயுடன் நிகழ்கின்றன, ஏனெனில் இவை இரண்டும் முதுமைக்கால மறதி நோயின் மிகவும் பொதுவான இரண்டு வகைகளாகும். கலப்பு முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுக்கு இரண்டு வகையான முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளும் இருக்கும், ஒரு வகை முதுமைக்கால மறதி நோய் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும்.

காரணங்கள்

நமது உடலின் உயிரணுக்கள் செயல்படவும் உயிருடன் இருக்கவும் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை இரத்தம் கொண்டு செல்கிறது. இரத்த ஓட்டத்தில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக இரத்தம் சில மூளை திசுக்களை அடைய முடியாதபோது, இந்த திசுக்கள் தங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பெற முடியாமல் சேதமடைகின்றன. இந்த இரத்த ஓட்டமின்மை நீண்ட காலத்திற்கு நீடித்தால், இந்த திசுக்கள் இறந்து, மீள முடியாத சேதத்தை ஏற்படுத்தலாம்.

இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயை ஏற்படுத்தக்கூடிய சில பொதுவான இரத்தநாளப் பிரச்சினைகள் பின்வருமாறு: 

இஸ்கெமிக் ஸ்ட்ரோக் (இரத்தவோட்டக் குறை சார்ந்த பக்கவாதம்)

‘இஸ்கெமியா’ என்ற வார்த்தையின் அர்த்தம் ‘இரத்த ஓட்டம் இல்லாமை’ என்பதாகும். இரத்தவோட்டக் குறை சார்ந்த பக்கவாதம் என்பது மூளையில் உள்ள இரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பு ஆகும். ஒற்றை இரத்தவோட்டக் குறை சார்ந்த பக்கவாதம் அல்லது பல பக்கவாதங்கள், மூளைத் திசுக்களை இரத்தம் சென்றடைவதைத் தடுக்கலாம். 

ஹெமரேஜிக் ஸ்ட்ரோக் (இரத்தக்கசிவு சார்ந்த பக்கவாதம்)

‘ஹெமோரேஜ்’ என்ற சொல்லுக்கு இரத்தக்கசிவு என்று பொருள். மூளையில் இரத்தக்கசிவு அல்லது இரத்தக்கசிவு சார்ந்த பக்கவாதமானது, மூளையின் இரத்த நாளங்களில் ஏற்படலாம், மேலும் இது நிகழும்போது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கும். மூளையில் இரத்தக்கசிவு ஏற்படுவதற்கு தலையில் ஏற்படும் காயம், இரத்த நாளங்களின் சுவர்களை பலவீனப்படுத்தும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தக்கலன் புடைப்புகள் (அனீரிசம்) (இரத்த நாளங்களின் சுவர்களில் அசாதாரண வீக்கம்) உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம். 

நாள்பட்ட இரத்த நாள சேதம்

நாள்பட்ட இரத்த நாள சேதம் என்பது நீண்ட காலத்திற்கு நீடிக்கின்ற, இரத்த நாளங்களுக்கு ஏற்படுகின்ற சேதத்தைக் குறிக்கிறது. 

இரத்த நாளங்கள் குறுகுதல் போன்ற இரத்த நாளங்களுக்கு ஏற்படும் சேதமானது, அது கடுமையாக இருக்கும்போது, மூளை திசுக்களுக்கு இரத்தம் செல்வதைத் தடுக்கலாம். காலப்போக்கில், இந்த அடைப்பு இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயாக உருவாகலாம்.

இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயின் வகைகள்

இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளும், முதுமைக்கால மறதி நோய் முற்றும்போது அவை உருவாகும் வரிசையும், ஒரு நபருக்கு உருவாகும் இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயின் வகையைப் பொறுத்தது. முதுமைக்கால மறதி நோயின் வகைகள் வெவ்வேறு காரணங்களால் வரையறுக்கப்படுகின்றன. 

இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயின் முக்கிய வகைகள் பின்வருமாறு:

சப்கார்டிகல் வாஸ்குலர் டிமென்ஷியா
  • மூளையின் ஆழத்தில் உள்ள சிறிய இரத்த நாளங்கள் சேதமடையும் போது சப்கார்டிகல் வாஸ்குலர் டிமென்ஷியா ஏற்படுகிறது. 
  • இந்த வகை முதுமைக்கால மறதி நோயில் சேதமடைந்த பெரும்பாலான திசுக்கள் மூளையின் ஆழமான பகுதியில் உள்ள சப்கார்டெக்ஸ் (புறணியடி) எனப்படும் பகுதியில் நிகழ்கின்றன. 
பக்கவாதத்திற்குத் தொடர்புடைய முதுமைக்கால மறதி நோய்

பக்கவாதம் தொடர்பான முதுமைக்கால மறதி நோயானது, மூளையில் ஒரு பக்கவாதம் அல்லது பல பக்கவாதங்கள் ஏற்படும் போது ஏற்படுகிறது. ஒரு பக்கவாதம் மூளை திசுக்களை இரத்தம் அடைவதைத் தடுக்கிறது, இதனால் திசு இறப்பு ஏற்படுகிறது. குறைந்த இரத்த விநியோகம் காரணமாக இறந்த திசுக்கள் இருக்கும் இடம் ‘இரத்தநசிவு’ என்று அழைக்கப்படுகிறது. 

  • ஸ்ட்ராட்டிஜிக்-இன்ஃபார்க்ட் டிமென்ஷியா 
    • ஒரு பெரிய பக்கவாதத்தால் முதுமைக்கால மறதி நோய் ஏற்படும்போது, ஸ்ட்ராடஜிக்-இன்ஃபார்க்ட் டிமென்ஷியா ஏற்படுகிறது.
    • இந்த வகையான முதுமைக்கால மறதி நோயில், சிந்தனை மற்றும் நடத்தையில் திடீர் மற்றும் கடுமையான மாற்றம் ஏற்படுகிறது, இருப்பினும் பொருத்தமான ஆதரவுடன், அறிகுறிகளை நிலைப்படுத்த முடியும். 
  • மல்டி-இன்ஃபார்க்ட் டிமென்ஷியா 
    • படிப்படியாக மூளை திசுக்களை சேதப்படுத்துகின்ற பக்கவாதங்களின் ஓர் தொடரால் முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் போது மல்டி-இன்ஃபார்க்ட் டிமென்ஷியா ஏற்படுகிறது. 
    • சில பக்கவாதங்கள் சிறியதாகவும் சிறிய அறிகுறிகளைக் கொண்டதாகவும் இருக்கலாம். அவை குறிப்பிடத்தக்க அறிகுறிகள் இல்லாமலேயே கூட நிகழலாம், இந்நிலையில் அவை ‘அமைதியான’ பக்கவாதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 
    • சிறிய பக்கவாதங்கள் மினி ஸ்ட்ரோக்குகள் அல்லது மாறுநிலையான இரத்தவோட்டக் குறை சார்ந்த தாக்குதல்கள் (Transient Ischemic Attacks, TIAs) என்றும் அழைக்கப்படுகின்றன. 
    • சில நிமிடங்களுக்கு நீடிக்கலாம், மேலும் அவற்றின் மிகவும் வெளிப்படையான அறிகுறிகள் ஒரு மணிநேரம் முதல் ஒரு நாள் வரை நீடிக்கலாம். 
    • காலப்போக்கில் அதிக பக்கவாதங்கள் ஏற்படுவதால், முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகள் உருவாகி மோசமடையக்கூடும். ஒவ்வொரு சிறிய பக்கவாதத்திற்குப் பிறகும் அறிகுறிகள் மோசமடைவது உடனடியாகக் கவனிக்கத்தக்கதாக இருக்கலாம், அதன் பிறகு அறிகுறிகள் நிலைபெறும்.

பக்கவாத நோய்க்குறிகள்

ஸ்ட்ராடஜிக்-இன்ஃபார்க்ட் மற்றும் மல்டி-இன்ஃபார்க்ட் டிமென்ஷியா இரண்டிலும், பக்கவாதத்தால் சேதமடைந்த குறிப்பிட்ட மூளைப் பகுதிகள் ஒரு நபர் அனுபவிக்கும் அறிகுறிகளின் வகையை (அறிகுறிகளின் குழு) தீர்மானிக்கின்றன. இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோய் உள்ள உங்களுக்கோ அல்லது உங்கள் அன்புக்குரியவருக்கோ என்ன பக்கவாத நோய்க்குறிகள் இருக்கலாம் என்பதை அறிந்துகொள்வது இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளை சிறப்பாக நிர்வகிக்கவும், பொருத்தமான ஆதரவைப் பெறவும் உதவலாம். 

பல பக்கவாதங்கள், ஹால்மார்க் பக்கவாத அறிகுறிகளுடன் ஏற்படும்: 

  • முகத்தின் ஒரு பக்கம் தொங்குதல் 
  • ஹெமிபரேசிஸ் (பாதி முகம் தளர்ச்சி): உடலின் ஒரு பக்கத்தில் பலவீனம் 
  • உணர்வின்மை, வழக்கமாக உடலின் ஒரு பக்கத்தில் 
  • டைசர்த்ரியா (நாக்குழறல்): பேசுவதில் சிரமம் மற்றும்/அல்லது தெளிவற்ற பேச்சு 
  • டிஸ்ஃபேசியா, அல்லது மொழிக் குறைபாடு: பேசும் மற்றும் எழுதப்பட்ட மொழியைப் புரிந்துகொள்ளும் திறன் குறைபாடு 
  • குழப்பம்: பேசுவதிலும் பேச்சைப் புரிந்துகொள்வதிலும் சிரமம் 
  • ஏதேனும் ஒரு கண்ணில் அல்லது இரண்டு கண்களிலும் பார்வைப் பிரச்சினைகள் 
  • இயக்கப் பிரச்சினைகள்: நடப்பதில் சிரமம்; கிறுகிறுப்பு; உடல் சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பில் சிரமங்கள்  
  • அறியப்பட்ட காரணம் எதுவுமின்றி கடுமையான தலைவலி 

இந்த ஹால்மார்க் அறிகுறிகள் எப்போதும் பக்கவாதத்தில் ஏற்படாமல் போகலாம், அல்லது பக்கவாதத்தின் வகையைப் பொறுத்து பிற நோய்க்குறிகளுடன் ஏற்படக்கூடும். பக்கவாதத்தின் வகையானது, மூளையின் பக்கவாட்டுப் பகுதி (வலது அல்லது இடது) உட்பட, மூளையின் பாதிக்கப்பட்ட பகுதியைப் பொறுத்தது. 

பக்கவாதம் முதலில் ஏற்பட்டவுடன் சில அறிகுறிகள் உடனடியாகத் தோன்றும், மற்றவை சிறிது நேரத்திற்குப் பிறகு தோன்றக்கூடும். கூடுதலாக, சில அறிகுறிகள் நீண்ட காலம் நீடிக்கும், அதே சமயம் திறன் இழப்பு (உதாரணமாக பேச்சு, பார்வை) சம்பந்தப்பட்ட சில அறிகுறிகள் சில நேரங்களில் பகுதியளவு குணமாகலாம். 

பக்கவாத நோய்க்குறிகள் பற்றிய கூடுதல் தகவல்களை, கூடுதல் தகவல் பிரிவில் காணலாம்: பக்கவாத நோய்க்குறிகள் பற்றி கட்டுரையின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

சிகிச்சை மற்றும் ஆதரவு

இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயானது, இரத்தநாளம் சார்ந்த உடல்நலப் பிரச்சினைகளுடன் அதிகம் தொடர்புடையது என்பதால், இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் தங்கள் உணவுமுறை மற்றும் உடல் செயல்பாடுகளின் அளவை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படலாம். 

முதுமைக்கால மறதி நோய் தொடர்பான ஆரோக்கிய நிலைமைகளுக்குச் சிகிச்சையளித்தல் மற்றும் ஆதரித்தல்

இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயின் நோயறிதலுக்குப் பிறகு சிகிச்சை மற்றும் ஆதரவானது, முதுமைக்கால மறதி நோயை ஏற்படுத்திய ஆரோக்கிய நிலைமைகளுக்கான சிகிச்சையுடன் சேர்த்து அளிக்கப்படலாம். உதாரணமாக, ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு அது இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயை ஏற்படுத்தியிருந்தால், அந்த நபர் பக்கவாதத்திற்குப் பிந்தைய பிரச்சினைகளைச் சரிசெய்ய, உடல் ரீதியான சிகிச்சை, பேச்சு சிகிச்சை மற்றும் தொழில்வழிச் சிகிச்சை போன்ற மறுவாழ்வுச் சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும்போது பக்கவாதத்திற்குப் பிந்தைய சிகிச்சைக்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடும்.  

நடைமுறை, உளவியல் மற்றும் மனவுணர்வு சார்ந்த ஆதரவு

இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயை அனுபவிப்பதும் அதற்கு ஏற்ப மாறுவதும் இந்த நிலையை அனுபவிக்கும் நபருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எளிதானதல்ல. எனவே, ஆதரவைப் பெறுவது முக்கியமாகும். உங்கள் சமூகத்தின் ஆதரவைத் தவிர, ஆதரவுச் சேவைகளும் கிடைக்கின்றன. உதாரணமாக, முதுமைக்கால மறதி நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்ட நபர்களுக்கும் குடும்பப் பராமரிப்பாளர்களுக்கும் நோயறிதலுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழிகாட்ட உதவும் நோயறிதலுக்குப் பிந்தைய ஆதரவுத் திட்டங்கள் உள்ளன. 

கிடைக்கக்கூடிய ஆதரவுச் சேவைகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, மக்கள்தொடர்புக் குழுவை (CREST) தொடர்பு கொள்ளவும். 

அபாயங்கள்

இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோய் உருவாகும் ஆபத்தானது, ஒருவரின் இரத்தநாளம் சார்ந்த ஆரோக்கியத்தைப் பாதிக்கும் விஷயங்களுடன் நெருக்கமாகத் தொடர்புடையது. இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோய் உருவாவதற்கான சில ஆபத்து காரணிகள் பின்வருமாறு: 

  • உயர் இரத்த அழுத்தம் 
  • உயர் இரத்தக் கொழுப்பு 
  • நீரிழிவு நோய் 
  • உடற்பருமன்
  • புகைப்பிடித்தல் 
  • வயது மூப்பு 

எனக்கு இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோய் உருவாகும் அபாயத்தை நான் எவ்வாறு குறைக்கலாம்?

பொதுவாக, ஒருவரின் இரத்தநாள அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிப்பதும் இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோய் உருவாகும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. 

ஒருவரின் இரத்தநாள அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான வழிகள்:

சமச்சீர் உணவுமுறையைப் பின்பற்றுங்கள்
  • உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு ஆகியவற்றை மிதமாக உட்கொள்ளுங்கள் 
  • போதுமான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள் 
  • வெள்ளை அரிசி அல்லது மைதா ரொட்டி போன்ற சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்துக்களுக்கு பதிலாக முழு தானியங்களை அதிகம் உட்கொள்ளுங்கள் 
  • இரத்தமுள்ள இறைச்சிக்குப் பதிலாக மீன் மற்றும் பீன்ஸ் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள் 
உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள்
  • வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான தீவிரம் கொண்ட உடல்ரீதியான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது 
  • ஏரோபிக் உடற்பயிற்சி (உங்கள் இதயத் துடிப்பு மற்றும் சுவாசத்தை விரைவுபடுத்தும் உடற்பயிற்சி), வலுவேற்றும் உடற்பயிற்சி (தசை நிறையைப் பராமரிக்கின்ற மற்றும் உருவாக்குகின்ற உடற்பயிற்சி), நீட்சிப் பயிற்சி மற்றும் உடல் சமநிலைப் பயிற்சிகளை கலந்து மேற்கொள்ளுங்கள் 
போதுமான தூக்கம் கிடைக்கும்
  • பொதுவாக, போதுமான தூக்கம் பெறுவது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கான ஆபத்தைக் குறைக்கிறது
மனஉளைச்சலை நிர்வகியுங்கள்
  • மன உளைச்சலை, குறிப்பாக நீண்டகால மன உளைச்சலை நிர்வகிப்பது இதய ஆரோக்கியத்தையும் மனநிலையையும் மேம்படுத்தலாம், இது இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
புகைபிடிப்பதைத் தவிர்க்கவும் அல்லது குறைக்கவும்
  • புகைபிடித்தல் இரத்த நாளங்களைச் சேதப்படுத்துகிறது, இது இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகப்படுத்தலாம்.
சமூக ஈடுபாட்டுடனும் தொடர்பிலும் இருங்கள்
  • மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பது மன உளைச்சல் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இது இரத்தநாளத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
  • நீங்கள் தொடர்பில் இருக்கக்கூடிய சில வழிகளில் அடங்குவன: துடிப்புடன் மூப்படைதற்கான நிலையங்களுக்குச் செல்வது, மற்றவர்களுடன் சேர்ந்து உங்கள் சமூகத்தில் தொண்டூழியம் புரிவது, சேர்ந்து சாப்பிடுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்பாடு செய்தல் அல்லது நண்பர்கள் மற்றும்/அல்லது குடும்பத்தினரை ஒன்றாக ஓய்வு நேர நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டல்
மனரீதியாக சுறுசுறுப்புடன் இருங்கள்

உங்களுக்கு நீங்களே மனதளவில் சவால் விடும் செயல்களில் ஈடுபடுங்கள். எடுத்துக்காட்டுக்கு: 

  • உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விஷயங்களைச் செய்தல் (கலை நடவடிக்கைகள், தோட்ட வேலை போன்றவை) 
  • புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளுதல் 
  • விளையாட்டுகளை விளையாடுதல் 
  • மற்றவர்களுடன் கலந்துரையாடுதல்

இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பது பற்றி மேலும் அறிய சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் இந்தக் காணொளியைப் பாருங்கள். 

முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பது பற்றி இங்கே மேலும் அறிக. 

எப்படி உதவி பெறுவது: 
உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கோ இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோய் இருந்தால், ஆதரவு அல்லது தகவல்கள் தேவைப்பட்டால், ஆதரவைப் பெறுவது பற்றி மேலும் அறிய மக்கள்தொடர்புக் குழு (CREST)-ஐத் தொடர்பு கொள்ளவும் அல்லது 6377 0700 என்ற டிமென்ஷியா சிங்கப்பூரின் உதவித் தொலைப்பேசி எண்ணை அழைக்கவும். 

கூடுதல் தகவல்கள்: பக்கவாத நோய்க்குறிகள்

பக்கவாத நோய்க்குறி என்பது பக்கவாதத்தால் ஏற்படும் அறிகுறிகளின் தொகுப்பாகும்.  

சிறுமூளை சார்ந்த பக்கவாத நோய்க்குறி
  • இரத்தநாள அடைப்பு அல்லது இரத்தப்போக்கானது சிறுமூளையின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டத்தைத் தடுக்கும்போது சிறுமூளை சார்ந்த பக்கவாதம் ஏற்படுகிறது.
  • சிறுமூளை சார்ந்த பக்கவாதம் அரிதானது, மேலும் இது 10% -க்கும் குறைவான பக்கவாதங்களையே ஏற்படுத்துகிறது3
  • சிறுமூளை சார்ந்த பக்கவாதத்தின் அறிகுறிகள் பின்வருமாறு:
    • ஒரு பக்கமாக விழுவது போன்ற உணர்வுடன் கிறுகிறுப்பு மற்றும் தலைச்சுற்றல் (சிறுமூளை சார்ந்த பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 75% பேரிடம் இது நிகழ்கிறது)4
    • குமட்டல் மற்றும் வாந்தி (50% நிகழ்வுகளில் ஏற்படுகிறது 4
    • நடப்பதில் சிரமம்
    • உடல் ஒருங்கிணைப்பில் சிரமம்
    • நடுக்கம்
    • தலைவலிகள்
    • தெளிவற்ற பேச்சு
    • பேசுவதற்குச் சிரமம்
    • இரட்டைப் பார்வை
பான்ட்டைன் ஸ்ட்ரோக் நோய்க்குறி
  • மூளைத் தண்டின் மூளைப்பாலம் (போன்ஸ்) எனப்படும் பகுதிக்கு இரத்த ஓட்டம் தடைபடுவதால், இரத்தநாள அடைப்பு அல்லது இரத்தப்போக்கு ஏற்படும் போது, பான்ட்டைன் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது.
  • பான்ட்டைன் பக்கவாதம் பொதுவானது, இது சுமார் 7% பக்கவாதங்களுக்குக் காரணமாக உள்ளது. 5
  • மூளைப்பாலம் மற்றும் மூளைத் தண்டு பக்கவாத அறிகுறிகள், ஹால்மார்க் பக்கவாத அறிகுறிகளில் இருந்து வேறுபடலாம், மேலும் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம்:
    • கிறுகிறுப்பு, தலைச்சுற்றல் மற்றும் கடுமையான உடல் சமநிலை பிரச்சினைகள்
    • இரட்டைப் பார்வை
    • தெளிவற்ற பேச்சு
    • விழுங்குவதில் சிரமங்கள்
    • குறைந்த விழிப்புணர்வு
    • உடலியக்கம் மற்றும்/அல்லது உணர்திறன் குறைபாடு
    • ஹெமிபரேசிஸ் (பாதி முகம் தளர்ச்சி): உடலின் ஒரு பக்கத்தில் உள்ள முகம், கரங்கள் மற்றும் கால்களில் பலவீனம் மற்றும் விகாரம்
ஃப்ரண்டல் லோப் ஸ்ட்ரோக் நோய்க்குறி
  • மூளையின் பெருமூளைப் புறணியின் முன்பக்க மடல்களுக்கு இரத்த ஓட்டத்தை இரத்த நாள அடைப்பு அல்லது இரத்தக்கசிவு தடுக்கும்போது ஃப்ரண்டல் லோப் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. 
  • ஃப்ரண்டல் ஸ்ட்ரோக்கின் அறிகுறிகள் பின்வருமாறு: 
    • ஹெமிபரேசிஸ் (பாதி முகம் தளர்ச்சி) 
    • பேச்சுப் பிரச்சினைகள் 
    • விழுங்குவதில் சிரமங்கள் 
    • கட்டுப்பாடின்மை
    • இடஞ்சார்ந்த பகுத்தறிவில் உள்ள சிரமங்கள் 
    • நடத்தை மற்றும் ஆளுமையில் ஏற்படும் மாற்றங்கள் 
    • பகுத்தறிவு, தீர்மானிப்புத் திறன், முடிவெடுத்தல் மற்றும் பிரச்சினையைத் தீர்க்கும் திறன் போன்ற நிர்வாக செயல்பாட்டுத் திறன்களில் சிரமங்கள்
டெம்போரல் லோப் ஸ்ட்ரோக் நோய்க்குறி
  • மூளையின் பெருமூளைப் புறணியின் மூளைப்பக்க மடல்களுக்கு இரத்த ஓட்டத்தை இரத்த நாள அடைப்பு அல்லது இரத்தக்கசிவு தடுக்கும்போது டெம்போரல் லோப் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. 
  • டெம்போரல் லோப் ஸ்ட்ரோக்கின் அறிகுறிகள் பின்வருமாறு: 
    • பேச்சுப் பிரச்சினைகள் 
      • வெர்னிக்கின் அஃபாசியா (பேச்சிழப்பு): ஒரு நபர் தன்னிடம் பேசப்படும் மொழியின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவோ அல்லது அர்த்தமுள்ள மொழியை உருவாக்கவோ முடியாத ஒரு நிலை. 
    • கேட்குந்திறன் பிரச்சினைகள் 
      • கேட்கும் திறன் குறைபாடானது, லேசான கேட்கும் திறன் இழப்பு முதல் அரிதான முழுமையாகக் கேட்கும் திறன் இழப்பு வரை இருக்கலாம் 
      • ஒலிகளைச் செயலாக்குவதில் சிரமங்கள் 
      • கேட்டல் சார்ந்த மாயைகள்
    • கோபம் அல்லது ஆக்ரோஷம், அல்லது ஆர்வமின்மை போன்ற உணர்ச்சி சார்ந்த மாற்றங்கள் 
    • நினைவாற்றல் குறைபாடுகள்
பாரியட்டல் லோப் ஸ்ட்ரோக் நோய்க்குறி
  • மூளையின் பெருமூளைப் புறணியின் மண்டை உச்சிப் பக்க மடல்களுக்கு இரத்த ஓட்டத்தை இரத்த நாள அடைப்பு அல்லது இரத்தக்கசிவு தடுக்கும்போது பாரியட்டல் லோப் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. 
  • பாரியட்டல் லோப் ஸ்ட்ரோக்கின் அறிகுறிகளானது, இடது அல்லது வலது மண்டை உச்சிப் பக்க மடல் பாதிக்கப்பட்டுள்ளதா, மேலும் தனிநபரின் மூளையின் எந்தப் பக்கம் சில செயல்பாடுகளுக்கு (எ.கா. மொழி, மனக் கணக்கீடுகள்) அதிக ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைப் பொறுத்தது. 
  • பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வலது பக்க பாரிட்டல் லோப் ஸ்ட்ரோக் இதற்கு வழிவகுக்கிறது: 
    • உடலின் இடது பக்கத்தில் பரேஸ்தீசியா (வற்றுணர்வு), அல்லது அசாதாரண உணர்வுகள் 
    • உடலின் இடது பக்கத்தில் பலவீனம் 
    • அரைக்கோள புறக்கணிப்பு: உடலின் இடது பக்கம் மற்றும் இடது பக்கச் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு குறைதல் 
    • உடலின் இடது பக்கத்தில் சுற்றுச்சூழலைப் பற்றிய இடஞ்சார்ந்த விழிப்புணர்வு குறைபாடு 
    • வரைபடங்களை நகலெடுப்பதில் உள்ள சிரமங்கள் 
    • திசை உணர்விலும், காட்சி மற்றும் இடஞ்சார்ந்த நினைவாற்றலிலும் சிரமங்கள் 
    • அனோசோக்னோசியா (குறை அறியாமை): பக்கவாத அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை, அல்லது பக்கவாதம் ஏற்பட்டிருக்கிறதா என்பது கூட அறியாமல் இருத்தல் 
  • பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இடது பக்க பாரிட்டல் லோப் ஸ்ட்ரோக் இதற்கு வழிவகுக்கிறது: 
    • உடலின் இடது பக்கத்தில் பரேஸ்தீசியா (வற்றுணர்வு), பலவீனம், அரைக்கோளப் புறக்கணிப்பு மற்றும்/அல்லது பலவீனமான இடஞ்சார்ந்த விழிப்புணர்வு 
    • வலது-இடது குழப்பம்: ஒருவரின் உடல் அல்லது சூழலின் இடது அல்லது வலது பக்கங்களுக்கு சுயத்தை நோக்குநிலைப்படுத்துவதில் சிரமம் 
    • அக்னோசியா (நுண்ணுணர்விழப்பு): பொருட்களை அடையாளம் காண்பதில் சிரமம் 
    • அகால்குலியா (கணிப்பாற்றல் இழப்பு): எண்ணுவதில் சிரமம் 
    • அஃபாசியா (பேச்சிழப்பு): பேச்சு மற்றும் மொழிப் பிரச்சினைகள்; பாரிட்டல் லோப் (மண்டை உச்சிப் பக்க மடல்) சேதமானது மற்றவர்களின் பேச்சை திரும்பச் சொல்ல இயலாமைக்கும் வழிவகுக்கலாம்
    • அக்ராஃபியா (எழுத இயலாமை): எழுதுவதில் சிரமம்
ஆக்ஸிபிடல் லோப் ஸ்ட்ரோக் நோய்க்குறி
  • மூளையின் பெருமூளைப் புறணியின் பின்மடல்களுக்கு இரத்த ஓட்டத்தை இரத்த நாள அடைப்பு அல்லது இரத்தக்கசிவு தடுக்கும்போது ஆக்ஸிபிடல் லோப் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. 
  • மூளையின் பிற மடல்களில் (மூளைப்பக்க, மண்டை உச்சிப் பக்க மற்றும் முன்பக்க மடல்கள்) ஏற்படும் பக்கவாதங்களை விட, ஆக்ஸிபிடல் லோப் ஸ்ட்ரோக்குகள் அரிதாகவே ஏற்படுகின்றன. 
  • ஒரு நபரின் காட்சி மற்றும் இடஞ்சார்ந்த தகவல்களை உணர்கின்ற, செயலாக்குகின்ற மற்றும் நினைவில் கொள்கின்ற திறனில் ஆக்ஸிபிடல் லோப்கள் முக்கியமான செயல்பாடுகளைச் செய்வதால், மூளையின் இந்தப் பகுதியைப் பாதிக்கும் பக்கவாதங்கள் இந்தத் திறன்களைக் கடுமையாகப் பாதிக்கலாம் 
    • ஆக்ஸிபிடல் லோப் ஸ்ட்ரோக்கின் அறிகுறிகள் பின்வருமாறு: 
    • பார்வை இழப்பு: 
      • ஹீயானோபியா: ஒருவரின் பார்வைப் புலத்தின் ஒரு பக்கத்தில் குருட்டுத்தன்மை 
        • பின்மடலின் ஒரு பக்கத்தைப் பாதிக்கும் ஒரு பக்கவாதமானது, பாதிக்கப்பட்ட மூளைப் பகுதிக்கு எதிரே உள்ள பார்வைப் புலத்தைப் பாதிக்கும்; எடுத்துக்காட்டாக, இடது பின்மடலுக்கு ஏற்படும் சேதமானது பார்வைப் புலத்தின் வலது பாதியில் பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது.
      • குவாட்ரான்டனோபியா (கால் பார்வைக் குறை): ஒரு நபரின் பார்வைப் புலத்தில் ஒரு கால் பகுதியில் குருட்டுத்தன்மை
      • மையப் பார்வை இழப்பு: உங்கள் பார்வைப் புலத்தின் மையத்தில் (நடுவில்) பார்வையிழப்பு
      • முழுமையான புறணிக் குருடு: புறணிக் குருடு என்பது மூளையின் புறணிப் பகுதியில் ஏற்படும் சேதத்தின் காரணமாக ஏற்படும் முழுமையான பார்வை இழப்பு என்று அர்த்தமாகும்; இந்தப் பார்வை இழப்பு கண்களில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுவதில்லை.
        • ஆண்டன் நோய்க்குறி: சில அரிதான சந்தர்ப்பங்களில், புறணி குருடு உள்ளவர்களுக்கு, அதற்கான சான்றுகள் காட்டப்பட்டாலும், அவர்கள் பார்வையற்றவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்
    • காட்சிசார் நுண்ணுணர்விழப்பு: பார்வையால் பொருட்களை அடையாளம் காணும் திறன்
    • ப்ரோசோபக்னோசியா (முகங்களை அடையாளம் காண இயலாமை), அல்லது முகக் குருட்டுத்தன்மை: மக்களின் முகங்களை அடையாளம் காணும் திறன்
      • வார்த்தைக் குருட்டுத்தன்மை: சிலரால் எழுத்துக்களை அடையாளம் காணவும் வார்த்தைகளை உச்சரிக்கவும் முடியும், ஆனால் வார்த்தைகளை அடையாளம் காண முடியாது
    • காட்சிசார் மாயத்தோற்றங்கள்: அரிதாக இருந்தாலும், தீப்பொறிகள் மற்றும் விளக்குகள் போன்ற உண்மையான காட்சிசார் தூண்டுதல்களிலிருந்து உருவாகாத படங்களை மக்கள் தங்கள் சூழலில் காணலாம்
    • அக்ராஃபியா (எழுத இயலாமை) இல்லாத அலெக்ஸியா (வாசிக்க இயலாமை): எழுதும் திறனில் சிரமங்கள் இல்லாமல் வாசிக்க இயலாமை
    • கண் இயக்கத்தில் சிரமம்
      • நிஸ்டாக்மஸ் (அலையும் விழி): கட்டுப்பாடற்ற, நிலையான மற்றும் விரைவான கண் அசைவுகள்
      • கண் அசைவுகளைக் கட்டுப்படுத்துதல்: வெவ்வேறு கண் பாகங்களின் இயக்கங்களை நிர்வகிக்கின்ற தசைகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகள் பாதிக்கப்படலாம், இதனால் கண் தவறான சீரமைப்பு மற்றும் இரட்டைப் பார்வை, பொருட்களைப் பின்தொடர்வதில் சிரமங்கள், ஒளி தீவிரத்தன்மையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தழுவுவதில் சிரமங்கள் மற்றும் கண் இமை தொங்குதல் ஆகியவை ஏற்படலாம்.

இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா?

ஆம் இல்லை
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest

  1. Health Promotion Board. (n.d.). Let’s talk about Vascular Dementia. HealthHub. https://www.healthhub.sg/programmes/mindsg/vascular-dementia  
  2. Chiew, H. J. (2021, July 5). Young-onset dementia: Improving outcomes with early recognition at Primary Care. SingHealth. https://www.singhealth.com.sg/news/defining-med/Young-Onset-Dementia  
  3. Ng, Z. X., Yang, W. R. E., Seet, E., Koh, K. M., Teo, K. J., Low, S. W., Chou, N., Yeo, T. T., & Venketasubramanian, N. (2015). Cerebellar strokes: A clinical outcome review of 79 cases. Singapore Medical Journal, 56(03), 145–149. https://doi.org/10.11622/smedj.2014195  
  4. Ioannides K, Tadi P, Naqvi IA. Cerebellar Infarct. [Updated 2022 May 8]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2023 Jan-. Available from: https://www.ncbi.nlm.nih.gov/books/NBK470416/  
  5. Huang, J., Qiu, Z., Zhou, P., Li, J., Chen, Y., Huang, R., Li, C., Ouyang, X., Feng, H., Xu, H., Liu, D., Dai, Z., Zhu, J., Liu, X., Chen, H., & Jiang, Y. (2019). Topographic location of unisolated pontine infarction. BMC Neurology, 19(1), 1-6. https://doi.org/10.1186/s12883-019-1411-6  

இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா?

ஆம் இல்லை
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest

பதிவிறக்கம் செய்யக்கூடிய வளங்கள்

The following material contains bite-sized information about dementia. To download or print it, simply click the image. You may also select the language of the material by clicking the “Select Language” button.

பதிவிறக்கம் செய்யக்கூடிய வளங்கள்

பின்வரும் பொருள் டிமென்ஷியா பற்றிய கடி-அளவிலான தகவல்களைக் கொண்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்ய அல்லது அச்சிட, படத்தை கிளிக் செய்யுங்கள். "மொழியைத் தேர்ந்தெடுக்கவும்" பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலமும் நீங்கள் பொருளின் மொழியைத் தேர்ந்தெடுக்கலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

Sed tristique blandit facilisis eleifend elit lobortis eros, massa aenean. Suspendisse aliquam eget tortor viverra nulla duis.

Skip to content