Playback speed:
அறிவுசார் இயலாமை உள்ளவர்கள் (PWIDகள்) தனித்துவமான சவால்களை எதிர்கொள்கின்றனர், குறிப்பாக அவர்கள் வயதாகி, முதுமைக்கால மறதி நோய் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகும்போது, இது அவர்களின் பராமரிப்பை சிக்கலாக்குகிறது.
இந்தக் கட்டுரை முதுமைக்கால மறதி நோய்க்கும் அறிவுசார் இயலாமைக்கும் இடையிலான முக்கியமான தொடர்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, ஆபத்து காரணிகள், அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் மற்றும் நோயறிதலின் சவால்கள் பற்றிய ஆழ்ந்த கண்ணோட்டத்தை வழங்குகிறது. இது நடைமுறை ரீதியான உத்திகளையும் பராமரிப்பாளர்களுக்கு மதிப்புமிக்க ஆதரவையும் வழங்குகிறது. விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், பயனுள்ள தகவல்களைப் பகிர்வதன் மூலமும், அறிவுசார் இயலாமை மற்றும் முதுமைக்கால மறதி நோய் உள்ள நபர்கள் தங்கள் கண்ணியத்தையும் சுயாதீனத்தையும் பேணும் அதே வேளையில், அவர்கள் பெறுவதற்குத் தகுதியுடைய பரிவு மிகுந்த கவனிப்பைப் பெறுவதை உறுதி செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
முதுமைக்கால மறதி நோயும் அறிவுசார் இயலாமையும்
முதுமைக்கால மறதி நோய் மற்றும் அறிவுசார் இயலாமை என்றால் என்ன?
முதுமைக்கால மறதி நோய் என்பது மூளையைப் பாதிக்கும் அறிகுறிகளின் தொகுப்பைக் குறிக்கிறது, இது நினைவாற்றல், கற்றல், சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளும் திறன், மொழி, புரிதல் மற்றும் முடிவெடுக்கும் திறன் உள்ளிட்ட அறிவுசார் செயல்பாடுகள் படிப்படியாகக் குறைவதற்கு காரணமாகிறது.1 இதேபோல், அறிவுசார் இயலாமை இருப்பது கண்டறியப்பட்ட ஒருவர் தங்கள் அறிவாற்றல் செயல்பாடு மற்றும் சுயாதீன வாழ்க்கைத் திறன்களில் கட்டுப்பாடுகளை அனுபவிக்கக்கூடும். மனநல கோளாறுகளைக் கண்டறிதல் மற்றும் அவற்றின் புள்ளிவிவர கையேட்டின் படி, அறிவுசார் இயலாமை என்பது நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு ஆகும், இது 18 வயதிற்கு முன்னர், அன்றாட வாழ்வில் சுயாதீனமாக செயல்படுவது போன்று அறிவுசார் செயல்பாடு மற்றும் தகவமைப்புத் திறன்களின் வளர்ச்சியில் பொதுவான தாமதம் அல்லது குறைபாடாக வெளிப்படுகிறது.2
முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகள் சில சமயங்களில் அறிவுசார் குறைபாட்டின் விளைவுகளென்று தவறாக நினைத்துக் கொள்ளப்படலாம், மேலும் தேவைப்படும் ஆதரவு ஆனது பெரியோர்களுக்கு பொதுவாக வழங்கப்படுவதிலிருந்து வேறுபட்டிருக்கலாம். இந்த இரண்டு மருத்துவ நிலைகளின் சிக்கல்களையும் புரிந்துகொள்வது, பொருத்தமான பராமரிப்பை உறுதி செய்வதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், அதிகம் கவனிக்கப்படாத இத்தகைய மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் மிக முக்கியமானது.
பரவல் நிலை மற்றும் ஆபத்து காரணிகள்
2024 ஆம் ஆண்டில் மனநலக் கழகம் வெளியிட்ட ஒரு கட்டுரையில், சிங்கப்பூரில் 60 முதல் 74 வயதுடைய 33 பேரில் ஒருவருக்கு முதுமைக்கால மறதி நோய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.3 பொது மக்களுடன் ஒப்பிடும்போது, அறிவுசார் இயலாமை உள்ளவர்களுக்கு (கூடுதல் மனநல நோயறிதல் இல்லாமல்) முதுமைக்கால மறதி நோய் வருவதற்கான வாய்ப்பு கணிசமாக வித்தியாசப்படவில்லை4 கூடுதலாக, 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், 60 முதல் 69 வயதுடைய அறிவுசார் இயலாமை உள்ள 25 நபர்களிடத்தில் 2 பேருக்கும் (டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்களைத் தவிர) முதுமைக்கால மறதி நோயும், 70 முதல் 79 வயதுடைய அறிவுசார் இயலாமை உள்ள 25 நபர்களிடத்தில் 5 பேருக்கும் (டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்களைத் தவிர) முதுமைக்கால மறதி நோய் இருப்பதாகக் காட்டுகிறது.5 இருப்பினும் மனநலிவு நோய் (Down Syndrome) அல்லது ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (Autism Spectrum Disorder) போன்ற வேறு எந்த மருத்துவ நிலைகளும் இல்லாத அறிவுசார் இயலாமை உள்ளவர்களுக்கு மட்டுமே இது அறியப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அறிவுசார் இயலாமை உள்ளவர்களிடத்தில் முதுமைக்கால மறதி நோய் ஏற்படுவதற்கான அறியப்பட்ட ஆபத்து காரணிகள், நரம்பியல் வகை மக்கள்தொகையில் உள்ளதைப் போலவே இருக்கின்றன. பிறவற்றுக்கு மத்தியில், இவற்றில் அதிகரித்த வயது, உயர் இரத்த அழுத்தம், மனச்சோர்வு, பக்கவாதம் 5, மற்றும் பல மருந்துகளை உட்கொள்ளுதல்10 உள்ளிட்டவை அடங்கும். இருப்பினும், மனநலிவு நோய் (Down Syndrome) அல்லது ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (Autism Spectrum Disorder) இருப்பது கண்டறியப்படுவது கூடுதல் ஆபத்து காரணிகளை ஏற்படுத்துகிறது.
மனநலிவு நோய் (Down Syndrome) உள்ளவர்களுக்கு 407 வயதிலிருந்தே முதுமைக்கால மறதி நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், மனநலிவு நோய் (Down Syndrome) உள்ள பெரியவர்களுக்கு ஆல்சைமர் நோய் வருவதற்கான ஆபத்து கணிசமாக அதிகமாக இருப்பதாகவும் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.8 மனநலிவு நோய் (Down Syndrome) என்பது ஒரு மரபணு நிலை ஆகும், இந்நிலை உள்ள நபருக்கு குரோமோசோம் 21 இன் கூடுதல் நகல் இருக்கும்.6 உடலின் செல்களில் உள்ள குரோமோசோம் 21 இன் கூடுதல் நகலானது உடல் வளர்ச்சி அடையும் மற்றும் செயல்படும் விதத்தைப் பாதிக்கிறது.6 60 வயதிற்குப் பிறகு, மனநலிவு நோய் (Down Syndrome) உள்ள பெரியவர்களில் சுமார் 50-70% பேர் முதுமைக்கால மறதி நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, ஏனெனில் அவர்களுக்கு பொது மக்களை விட சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே உடல் மற்றும் அறிவாற்றல் சார்ந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன.9,11
உயர்கல்விக்கான குறைவான அணுகல் மற்றும் சமூக மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் குறைவான சமூக ஈடுபாடுகள் போன்ற வரம்புகள் காரணமாக, 65 வயதுக்குட்பட்ட ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (Autism spectrum Disorder) உள்ள பெரியவர்களுக்கு சாதாரண மக்களை விட முதுமைக்கால மறதி நோய் கண்டறியப்படுவதற்கான வாய்ப்பு தோராயமாக 2.6 மடங்கு அதிகமாக உள்ளது.12
அறிவுசார் இயலாமை உள்ளவர்களிடத்தில் ஏற்படும் முதுமைக்கால மறதி நோயின் அடையாளங்களும் அறிகுறிகளும்
அறிவுசார் இயலாமைகள் மற்றும் முதுமைக்கால மறதி நோயின் நடைமுறைகள் குறித்த தேசிய பணிக்குழுவின் கூற்றுப்படி13, முதுமைக்கால மறதி நோய் இருக்கக்கூடிய அறிவுசார் இயலாமை உள்ளவர்கள், கவனம் செலுத்துதல், பழக்கமான சூழல்களில் தங்கள் வழியைக் கண்டறிதல், மக்களின் பெயர்களை நினைவில் வைத்திருத்தல், காட்சி மற்றும் இயக்க ஒருங்கிணைப்பு மற்றும் தூக்கத்தின் தரம் போன்ற விஷயங்களில் கூடுதல் சவால்களை சந்திப்பார்கள். அவர்கள் தங்களின் அன்றாட வழக்கத்திலும், தூக்கம் அல்லது உணவுப் பழக்கத்திலும் மாற்றங்களை வெளிப்படுத்தக்கூடும், மேலும் அவர்களுக்கு சுய பராமரிப்புப் பணிகளை நிர்வகிப்பதற்கு கூடுதல் உதவி தேவைப்படலாம். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் உள்ள சிரமங்கள், ஆக்ரோஷமான நடத்தைகளாகவும் ஆதாரமற்ற பயங்களாகவும் வெளிப்படலாம். மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் பொதுவாக நடத்தைகளின் தொகுப்பாகக் காணப்படுகின்றன.9
அறிவுசார் இயலாமை உள்ளவருக்கு முதுமைக்கால மறதி நோயறிதலைப் பெறுதல்
சிங்கப்பூரில், பொதுவாக முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களைக் கண்டறியும் சுகாதார நிபுணர்கள் நரம்பியல் நிபுணர்கள், முதியோர் மருத்துவர்கள் மற்றும் முதியோர் மனநல மருத்துவர்கள் ஆவர். பொது மக்களுக்குப் பயன்படுத்தப்படும் நோயறிதல் அல்லது மதிப்பீட்டு கருவிகள் பெரும்பாலும் அறிவுசார் இயலாமை உள்ளவர்களுக்குப் பொருத்தமற்றதாக உள்ளன, ஏனெனில் இந்த மக்கள் பிரிவினர், அவர்களின் குறைந்த அறிவாற்றல் செயல்பாடு காரணமாக, முதுமைக்கால மறதி நோய் இல்லாவிட்டாலும், அறிவாற்றல் சோதனைகளில் மோசமாகச் செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, அறிவுசார் இயலாமை உள்ளவர்களிடத்தில் முதுமைக்கால மறதி நோயைக் கண்டறிவதற்கு அவர்களின் வழக்கமான அறிவாற்றல் மற்றும் செயல்பாட்டு நிலைகளில் சரிவு ஏற்பட்டிருப்பதைக் காட்ட வேண்டியிருக்கும்.14இருப்பினும், அறிவுசார் இயலாமை உள்ளவர்களில் பலர் குறிப்பிடத்தக்க சரிவுகளை வெளிப்படுத்துவதற்கு முன்னர் அடிப்படை மதிப்பீட்டை மேற்கொள்ளாமல் இருக்கலாம்.
எண்ணற்ற மருத்துவ நிலைமைகள் முதுமைக்கால மறதி நோயைப் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தக்கூடும், மேலும் பொது மக்களுடன் ஒப்பிடும்போது அறிவுசார் இயலாமை உள்ளவர்களுக்கு ஏற்கனவே உடல் ரீதியான ஆரோக்கியப் பிரச்சினைகள் அதிகமாக இருக்கக்கூடும். அறிவுசார் இயலாமை உள்ளவர்களிடத்தில் கணிசமான எண்ணிக்கையிலான உடல்நல மற்றும் உணர்வு குறைபாடுகள் கண்டறியப்படாத நிலையிலேயே உள்ளன.15 எனவே, முதுமைக்கால மறதி நோய் இருப்பதை உறுதி செய்வதற்கு முன்பு சிகிச்சையளிக்கக்கூடிய பிற மருத்துவ நிலைமைகளை கண்டறிவது மிகவும் முக்கியம்.
அறிவுசார் இயலாமை உள்ளவர்களிடத்தில் முதுமைக்கால மறதி நோயைக் கண்டறிவது சவாலானதாக இருக்கலாம், ஏனெனில் அறிவாற்றலில் ஏற்படும் மாற்றங்களை மதிப்பிடுவது பெரும்பாலும் பராமரிப்பாளர்களை பெரிதும் சார்ந்துள்ளது, ஏனெனில் அவர்களே முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளைக் கவனித்துக் குறிப்பிடுவர். முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளும் அறிவுசார் இயலாமையின் அறிகுறிகளும் பெரும்பாலும் ஒன்று போல் இருக்கும், எனவே காலப்போக்கில் நபரிடம் ஏற்படும் ஏதேனும் மாற்றங்களைக் கண்காணிக்க அவரின் நடத்தை மற்றும் அறிவாற்றல் திறன்களின் அடிநிலையை நிறுவுவது முக்கியம். இதை ஆதரிக்கும் வகையில், தேசிய பணிக்குழு, முதுமைக்கால மறதி நோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் சோதனையை (EDSD) உருவாக்கியுள்ளது, இதனை குறிப்பிட்ட பல ஆண்டுகளாக அறிவுசார் இயலாமை உள்ள நபரை அறிந்த எவரும் நிறைவு செய்யலாம்.
முதுமைக்காலமறதிநோயைஆரம்பத்திலேயேஅடையாளம்கண்டு, அறிவது பராமரிப்பாளர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் பராமரிப்பு, ஆதரவு மற்றும் சிகிச்சையை சரிசெய்வது குறித்து தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது. அறிவுசார் இயலாமை உள்ளவர்களிடத்தில் ஏற்படும் முதுமைக்கால மறதி நோயின் அடையாளங்களும் அறிகுறிகளும் என்ற பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அறிவுசார் இயலாமை உள்ளவர்கள் தங்களின் அடிநிலையிலிருந்து விலகி குறிப்பிட்ட விதமான நடத்தைகளை வெளிப்படுத்தினால், பராமரிப்பாளர்கள் பலதுறை மருந்தகத்தைப் பார்வையிட்டு ஒரு நிபுணரிடம் பரிந்துரை பெறுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த அணுகுமுறை
முதுமைக்கால மறதி நோய் உள்ள ஒருவரைப் பராமரிப்பது சவாலானதாக இருக்கலாம், அத்துடன் அறிவுசார் இயலாமை இருப்பது பராமரிப்பில் சிக்கலை இன்னும் அதிகரிக்கிறது, ஏனெனில் அறிவுசார் இயலாமை உள்ளவர்களுக்கும் சுய பராமரிப்புத் திறன்கள், தகவல் பரிமாற்ற திறன்கள் மற்றும் அறிவாற்றல் செயல்பாடு குறைவாக இருக்கும். அறிவுசார் இயலாமை உள்ளவர்களுடன் நேர்மறையான ஊடாடல்களில் ஈடுபடுவது மிக முக்கியம், அன்புக்குரியவர்களுடன் திறம்பட ஈடுபடும் அவர்களின் திறன் குறைந்துவிட்டாலும் கூட. தகவல் பரிமாற்றம் மிகவும் கடினமாகும்போது அல்லது தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் போகும்போது, அது மனநிலை மற்றும் நடத்தையில் மாற்றங்கள் நிகழுவதற்கு வழிவகுக்கும், இது பராமரிப்பாளர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி அன்றாட வழக்கங்களை சீர்குலைக்கும்.16,17
முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த அணுகுமுறையில் ஐந்து உத்திகள் இடம்பெற்றுள்ளன, இவை பயனுள்ள இருவழி தகவல் பரிமாற்றத்தை எளிதாக்குகின்றன, இரு தரப்பினருக்கும் விரக்தியையும் மன அழுத்தத்தையும் குறைக்க உதவும். இந்த உத்திகள் சிறந்த புரிதலையும் தொடர்பையும் வளர்ப்பதன் மூலம் பராமரிப்பு அனுபவத்தை நன்கு மேம்படுத்தலாம், இறுதியில் முதுமைக்கால மறதி நோய் உள்ள அறிவுசார் இயலாமை உள்ளவர்களின் பராமரிப்புத் தரத்தை மேம்படுத்தலாம்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் குளித்தல் அல்லது உடை அணிதல் போன்ற அன்றாடப் பணிகளைச் செய்வதில் சிரமங்களைச் சந்திக்கும் அதே வேளையில், அவர்களிடத்தில் இருக்கும் திறன்கள் மற்றும் திறமைகளைப் பயன்படுத்த ஊக்குவிப்பது அவர்களின் சுயாதீனத்தைப் பராமரிக்க உதவும். பராமரிப்பாளர்கள் அவர்களின் அன்றாடப் பணிகளுக்கு ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்கும் விதத்தில் இலகுவாக இருப்பதன் மூலம் இதை அடைய முடியும். உதாரணமாக, அறிவுசார் இயலாமை உள்ளவர்கள் திணறாமல் நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்கலாம்17, மற்றும் முறையான அறிவுறுத்தல்களை வழங்கி பணிகளை சிறிய படிநிலைகளாகப் பிரித்து செய்யலாம்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள், கடந்த கால நிகழ்வுகளை நினைவு கூர்வது அல்லது தங்களுக்கு இன்னும் சில திறன்கள் இருப்பதாக நம்புவது போன்ற விஷயங்களில் மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட ஒரு யதார்த்தத்தை அனுபவிக்கலாம். அங்கீகரித்தலில் அவர்கள் நம்பும் சவால்களுக்கு ஒத்துணர்வைத் தெரிவிப்பதன் மூலமும், அவர்களின் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமும் அவர்களின் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் ஒப்புக்கொள்வது அடங்கும்.18அவர்களின் உணர்ச்சி மற்றும் உணர்வை நேர்மறையான முறையில் அங்கீகரிப்பது அவர்களுக்கு ஏற்படக்கூடிய கிளர்ச்சியைக் குறைக்கலாம்.19
வாழ்க்கை வரலாறு தொகுப்புகள், அறிவுசார் இயலாமை உள்ளவர்கள் வாழ்ந்த அனுபவங்களையும் முக்கிய நினைவுகளையும் ஒரு கோப்புறையில் சேகரிப்பதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. இந்த வளஆதாரம் அவர்கள் தங்களின் கடந்த கால நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கவும், அர்த்தமுள்ள உரையாடல்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும். வாழ்க்கைக் கதைகளை உருவாக்குவது தகவல் பரிமாற்றங்களை மேம்படுத்துவதோடு, தனிநபருக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துகிறது என்பதை இத்தகைய மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன. வாழ்க்கைக் கதைகளும் நினைவாற்றல் சிகிச்சையின் ஒரு முக்கிய அங்கமாகும், இது நினைவுகளைப் பாதுகாக்கவும் உணர்ச்சி ரீதியான தொடர்புகளை வளர்க்கவும் உதவும்.
முதுமைக்கால மறதி நோய் உள்ள ஒருவருக்கு எதிர்மறையான எண்ணங்கள் அல்லது உணர்வுகள் ஏற்படும்போது, நேர்மறையான தூண்டுதலுக்குத் திசைத்திருப்பிவிடுவது அவர்களின் கவனத்தை மிகவும் இனிமையான நினைவுகளுக்கு மாற்ற உதவும். கடினமான தருணங்களில், பராமரிப்பாளர்கள் அமைதியாகப் பேசுவதும், அந்த நபர் சூழ்நிலையைச் சமாளித்து, நிம்மதியாக உணரவும் உதவும் வகையில் தெளிவான, படிப்படியான வழிமுறைகளை வழங்குவதும் முக்கியம்.9
குடும்பங்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான ஆதரவு
நிதி ரீதியான ஆதரவு
பராமரிப்பது என்பது ஒரு தொடர்ச்சியான கற்றல் பயணம். ஒருவரைப் பராமரிக்கும் பணி என்பது முதலில் சவாலாகத் தோன்றலாம், ஆனால் அதற்குத் தயாராக இருப்பது உங்கள் அன்புக்குரியவருக்கு சிறந்ததை வழங்கிட உங்களுக்குச் சக்தியளிக்கும். சிறப்புத் தேவைகள் உள்ள தங்கள் அன்புக்குரியவர்களைப் பராமரிப்பதன் விளைவாக நிதி சொத்துக்கள் குறைந்து வருவதாலும், செலுத்த வேண்டிய மருத்துவச் செலவுகள் அதிகரிப்பதாலும் பராமரிப்பாளர்கள் சில நேரங்களில் நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.21சிங்கப்பூரில் பராமரிப்பாளர்களுக்கு பல நிதி உதவித் திட்டங்கள் உள்ளன. இந்த விருப்பங்கள் பற்றி இங்கே மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
பராமரிப்பாளர் ஆதரவு
பராமரிப்பாளர் ஆதரவு என்பது நாள்பட்ட நோய், இயலாமை அல்லது முதுமை தொடர்பான பிரச்சினைகள் உள்ள ஒருவரைப் பராமரிக்கும் பொறுப்புள்ள நபர்களுக்கு வழங்கப்படும் வளஆதாரங்கள் மற்றும் உதவியைக் குறிக்கிறது. இந்த ஆதரவு பராமரிப்பாளர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் உணர்ச்சி, உடல் மற்றும் நிதி ரீதியான சவால்களைக் குறைக்க உதவும்.
கீழே சில பொதுவான பராமரிப்பாளர் ஆதரவு வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன, இவை உங்களை நீங்கள் கவனித்துக் கொள்ள ஒரு வழிகாட்டி என்பதைத் தழுவியது.
ஒட்டுமொத்தமாக, பராமரிப்பாளர் ஆதரவு என்பது பராமரிப்பாளர்கள் மற்றும் அவர்கள் கவனித்துக்கொள்பவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் இது பராமரிப்பாளர்கள் தங்கள் பொறுப்புகளையும் உணர்ச்சிகளையும் திறம்பட நிர்வகிக்க உதவுகிறது.
வல்லுநர் அல்லது வேறு பராமரிப்பாளர் பராமரிப்பை வழங்கும் வேளையில், பராமரிப்பாளர்கள் இடை ஓய்வு எடுக்க அனுமதிக்கும் தற்காலிக நிவாரணம். இடை ஓய்வுப் பராமரிப்பு சேவைகள் பகல்நேர பராமரிப்பு நிலையங்கள், பெரியோர் குடியிருப்பு இல்லங்கள் மற்றும் வீட்டு இடை ஓய்வு சேவைகள் என பல்வேறு அமைப்புகளில் வழங்கப்படுகின்றன.
இதே போன்ற சூழ்நிலைகளில் உள்ள பராமரிப்பாளர்கள் தங்களின் அனுபவங்கள், ஆலோசனைகள் மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய சந்திப்புகள் அல்லது இணையவழி மன்றங்கள்.
மருத்துவத் தேவைகளை நிர்வகித்தல் அல்லது கவலைக்குரிய நடத்தைகளைக் கையாளுதல் போன்ற குறிப்பிட்ட பராமரிப்புத் திறன்கள் குறித்த பயிற்சியை வழங்கும் பயிற்சிபட்டறைகள் அல்லது வளஆதாரங்கள்
பராமரிப்பாளர்கள் தங்கள் பராமரிப்புப் பணியுடன் தொடர்புடைய மன அழுத்தம், மனக்கவலை அல்லது மனச்சோர்வைச் சமாளிக்க உதவும் வல்லுநர் ஆதரவு.
குறைபாடுகள் உள்ள உங்கள் குடும்ப உறுப்பினர் மன அமைதியுடன் தொடர்ச்சியான கவனிப்பைப் பெறுவதை உறுதி செய்ய எதிர்கால பராமரிப்பு திட்டமிடல் அவசியம். FutureReady என்பது டிஜிட்டல் கருவித்தொகுப்பாகும், இது மேம்பட்ட பராமரிப்பு திட்டம், பிரதிநிதித்துவம், நீடித்த வழக்கறிஞர் அதிகாரம் மற்றும் வாழ்க்கை ஏற்பாடுகள் உள்ளிட்ட தொடர்ச்சியான தொகுதிகள் மூலம் எதிர்கால பராமரிப்பு திட்டமிடலுக்கு உதவுகிறது.
முடிவுரை
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் அறிவுசார் இயலாமை உள்ளவர்களைப் பராமரிப்பதற்கு, இரண்டு மருத்துவ நிலைகளையும் அவற்றின் சிக்கலான தொடர்புகளையும் நன்கு புரிந்துகொள்வது அவசியம். அறிவுசார் இயலாமை உள்ளவர்களுக்கு வயதாகும்போது, அவர்கள் முதுமைக்கால மறதி நோய் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும், இது பராமரிப்பை மேலும் சிக்கலாக்கும், அத்துடன் இவற்றின் அறிகுறிகள் பெரும்பாலும் ஒன்று போல் இருப்பதால் கண்டறியப்படாமல் இருக்கும். சரியான நேரத்தில், பயனுள்ள ஆதரவை வழங்குவதற்கு இந்த அறிகுறிகளை முன்கூட்டியே அடையாளம் காண்பது அவசியம்.
அறிவாற்றல் மற்றும் நடத்தை ரீதியான மாற்றங்களைக் கண்டறிவதில் பராமரிப்பாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர், மேலும் அவர்கள் பரிவுடனான பராமரிப்பை வழங்க சரியான கருவிகள் மற்றும் உத்திகளை அறிந்து வைத்திருக்க வேண்டும். தெளிவான தகவல் பரிமாற்றம், அங்கீகரிப்பு மற்றும் வாழ்க்கை கதை தொகுப்புகள் போன்று முதுமைக்கால மறதி நோய்க்கு உகந்த அணுகுமுறைகள் முதுமைக்கால மறதி நோய் உள்ள அறிவுசார் இயலாமை உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம். அது மட்டுமின்றி, குடும்பங்கள் மீதான உணர்ச்சி மற்றும் நிதிச் சுமைகளைக் குறைக்க நிதி ரீதியான ஆதரவு மற்றும் பராமரிப்பாளர் வளஆதாரங்களை அணுகுவது மிக முக்கியம்.
சுகாதார வழங்குநர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் ஆதரவுக் கட்டமைப்புகளுக்கு இடையே ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலம், முதுமைக்கால மறதி நோயைக் கொண்டிருக்கும் அறிவுசார் இயலாமை உள்ளவர்களுக்கு அவர்கள் பெறுவதற்குத் தகுதியுடைய பராமரிப்பு மற்றும் மரியாதை கிடைப்பதை நாம் உறுதிசெய்து, அவர்களின் கண்ணியம், சுதந்திரம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பாதுகாக்கலாம்.
ஆசிரியரின் சுயசரிதை
Movement for the Intellectually Disabled of Singapore (MINDS)
இந்தக் கட்டுரை MINDS AHPHub இல் உள்ள முதுமைக்கால மறதி நோய்க்கான பணிக்குழுவால் வழங்கப்பட்டது: சங் ஜிங் நிங், மூத்த தொழில்சார் சிகிச்சை நிபுணர்; நாடியா லோக் யி ஜென், தொழில்சார் சிகிச்சை நிபுணர்; வோங் ஜீ குய், தொழில்சார் சிகிச்சை நிபுணர்; மோஃபியானா, முஹம்மது சலீம் அவர்களின் மகள், சமூகப் பணி பங்காளி; மற்றும் வேல்முருகன் அமிர்தம்பிகை, உடற்பயிற்சி மருத்துவர். முதுமைக்கால மறதி நோய்க்கான பராமரிப்பில் உள்ள சவால்களை நிவர்த்தி செய்ய இவர்கள் ஒன்றிணைந்து தங்கள் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
Tell us how we can improve?
- Alzheimer’s Disease International (2009) World Alzheimer’s 568 Report: The Global Prevalence of Dementia. Available online: 569 http://www.alz.co.uk/research/world-report-2009
- American Psychiatric Association. (2013). Diagnostic and statistical manual of mental disorders (5th ed.). American Psychiatric Association.
- Institute of Mental Health. (2024). IMH study shows decrease in prevalence of dementia and improvement in treatment gap among older adults in Singapore over the past decade. Retrieved September 2, 2024, from https://www.imh.com.sg/Newsroom/News-Releases/Documents/WISE%202%20Press%20Release_28Aug_IMHFINAL.pdf
- Zigman, W.B., Schupf, N., Devenny, D., Miezejeski, C., Ryan, R., Urv, T.K., Schubert, R., & Silverman, W. (2004). Incidence and prevalence of dementia in elderly adults with mental retardation without Down syndrome. American Journal on Mental Retardation, 109, 126–141. doi:10.1352/0895-8017(2004)109.
- Takenoshita, S., Terada, S., Inoue, T., Kurozumi, T., Yamada, N., Kuwano, R., & Suemitsu, S. (2023). Prevalence and modifiable risk factors for dementia in persons with intellectual disabilities. Alzheimer’s Research & Therapy, 15(1), 125.
- S. Centers for Disease Control and Prevention. (2024). Down Syndrome. Retrieved October 10, 2024, from https://www.cdc.gov/birth-defects/about/down-syndrome.html#cdc_disease_basics_overview-what-it-is
- Bayen, E., Possin, K. L., Chen, Y., de Langavant, L. C., & Yaffe, K. (2018). Prevalence of aging, dementia, and multimorbidity in older adults with Down syndrome. JAMA neurology, 75(11), 1399-1406.
- Holland, A. J., & Oliver, C. (1995). Down’s syndrome and the links with Alzheimer’s disease. Journal of Neurology, Neurosurgery, and Psychiatry, 59, 111–114.
- National Task Group on Intellectual Disabilities and Dementia Practice. (2012). ‘My thinker’s not working’: A national strategy for enabling adults with intellectual disabilities affected by dementia to remain in their community and receive quality supports. Retrieved October 9, 2024, from aadmd.org/ntg/thinker
- Margolis, S. A., Kelly, D. A., Daiello, L. A., Davis, J., Tremont, G., Pillemer, S., Denby, C., & Ott, B. R. (2021). Anticholinergic/sedative drug burden and subjective cognitive decline in older adults at risk of Alzheimer’s disease. The Journals of Gerontology: Series A, 76(6), 1037–1043. https://doi.org/10.1093/gerona/glaa222
- Matthew P. Janicki & Arthur J. Dalton (2000) Prevalence of Dementia and Impact on Intellectual Disability Services. Mental Retardation: June 2000, Vol. 38, No. 3, pp. 276-288
- Vivanti, G., Tao, S., Lyall, K., Robins, D. L., & Shea, L. L. (2021). The prevalence and incidence of early‐onset dementia among adults with autism spectrum disorder. Autism Research, 14(10), 2189-2199.
- National Task Group on Intellectual Disabilities and Dementia Practices. (n.d.). Facts About Dementia. Retrieved September 10, 2024, from https://www.the-ntg.org/facts-about-dementia
- Torr, J. (2016). Dementias. In C. Hemmings & N. Bouras (Eds.), Psychiatric and Behavioral Disorders in Intellectual and Developmental Disabilities (pp. 55–64). chapter, Cambridge: Cambridge University Press.
- Beange, H., McElduff, A., & Baker, W. (1995). Medical disorders of adults with mental retardation: a population American journal of mental retardation : AJMR, 99(6), 595–604.
- Cleary, J., & Doody, O. (2017). Nurses’ experience of caring for people with intellectual disability and dementia. Journal of Clinical Nursing, 26(5–6), 620–631. https://doi.org/10.1111/jocn.13431
- Judd M. (2017). Communication strategies for patients with dementia. Nursing, 47(12), 58–61. https://doi.org/10.1097/01.NURSE.0000524758.05259.f7
- Teitelman, J., Raber, C., & Watts, J. (2010). The Power of the Social Environment in Motivating Persons with Dementia to Engage in Occupation: Qualitative Findings. Physical & Occupational Therapy in Geriatrics, 28(4), 321–333. https://doi.org/10.3109/02703181.2010.532582
- Tible, O. P., Riese, F., Savaskan, E., & von Gunten, A. (2017). Best practice in the management of behavioural and psychological symptoms of dementia. Therapeutic Advances in Neurological Disorders, 10(8), 297–309. https://doi.org/10.1177/1756285617712979
- Subramaniam, P., Thillainathan, P., Mat Ghani, N. A., & Sharma, S. (2023). Life Story Book to enhance communication in persons with dementia: A systematic review of reviews. PloS one, 18(10), e0291620. https://doi.org/10.1371/journal.pone.0291620
- Goh, W. (2023). Addressing Financial Challenges In Special Needs Families: The Importance Of Early Planning And Trusts. Singapore Family Physician, 48(7), 5. https://doi.org/10.33591/sfp.48.7.u5


