Playback speed:
முதுமைக்கால மறதி நோயுள்ளவர்கள் ஒரு பிரதிநிதியை நியமிப்பது முக்கியம். பிரதிநிதி என்பவர் தங்கள் வாடிக்கையாளரின் சார்பாக முடிவுகளை எடுப்பதற்கு உதவுவார். இந்தக் கட்டுரை பிரதிநிதித்துவத்தின் செயல்முறையைப் புரிந்துகொள்வதற்கான தகவல்களையும் வள ஆதாரங்களையும் பகிர்ந்து கொள்கிறது.
பிரதிநிதி என்றால் என்ன?
மனநல ஆற்றல் இல்லாத ஒரு நபர், நீண்டகால அதிகாரப் பத்திரத்தை தயார் செய்திருக்காதபோது, அவரது முடிவுகள் தொடர்பாக அவர் சார்பாக முடிவெடுக்க அதிகாரம் பெற்ற நியமனதாரர் இல்லாதபோதும், அவர் சார்பாக முடிவுகளை எடுக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் நபரே பிரதிநிதி ஆவார்.
மனநல ஆற்றல் விதிமுறைகளால் பரிந்துரைக்கப்பட்டபடி, அறக்கட்டளை நிறுவனங்கள் சட்டத்தின் (Cap.336) கீழ், பிரதிநிதி என்பவர் ஒரு தனிநபராகவோ அல்லது உரிமம் பெற்ற அறக்கட்டளை நிறுவனமாகவோ இருக்கலாம்.
பிரதிநிதிகள், அந்த நபரின் சார்பாக அவர்கள் எடுத்த முடிவுகள் மற்றும் செலவுகளை விளக்குவதற்குப் பொது காப்பாளர் அலுவலகத்திற்கு வருடாந்திர அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
பிரதிநிதித்துவத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்த கூடுதல் தகவல்களை இந்த இணையதளங்கள் கொண்டுள்ளன:
அதிகார நியமனத்தையும் பிரதிநிதித்துவத்தையும் வேறுபடுத்தும் இரண்டு சூழல்கள் இதோ இங்கே:
காட்சி A: அதிகார நியமனம்
அம்மையார் டான் அவர்களுக்கு சமீபத்தில் முதுமைக்கால மறதி நோய் இருப்பது கண்டறியப்பட்டது. தனது மருத்துவ நிலை மோசமடையும்போது, அவர் தனது மனநல ஆற்றலை இழக்க நேரிடும் என்றும், ஒரு சொத்தை வாங்குவது அல்லது தனது தனிப்பட்ட சொத்துக்களின் உரிமையை மாற்றுவது போன்ற முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல் போகலாம் என்றும் அவர் அறிகிறார். தனக்கு மனநல ஆற்றல் குன்றும்போது, தன் விவகாரங்களை நிர்வகிக்க தனக்கு நம்பிக்கையான ஒருவரை நியமிக்க விரும்புகிறார். ஒரு முதியோர் மருத்துவரின் மதிப்பீட்டின் கீழ், அவருக்கு நீண்டகால அதிகாரப் பத்திரம் (LPA) உருவாக்கும் மனநல ஆற்றல் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் தனது மகன் மற்றும் சகோதரியை நீண்டகால அதிகாரப் பத்திரத்தின் அதிகார நியமனம் பெற்றவர்களாக தேர்வு செய்கிறார் (அவருக்கு மனநல ஆற்றல் குன்றும்போது அவரது சார்பாக அவரது விவகாரங்களை இவர்கள் நிர்வகிப்பார்கள்).
காட்சி B: பிரதிநிதித்துவம் (டெபுடிஷிப்)
திரு. லீ அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதுமைக்கால மறதி நோய் ஏற்படுகிறது. வெளிநாட்டில் வசித்து சமீபத்தில் சிங்கப்பூர் திரும்பிய அவரது ஒரே மகள், தனது தந்தையின் விவகாரங்கள் சிறப்பாக நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்ய விரும்புகிறார். தனது தந்தை நீண்டகால அதிகாரப் பத்திரத்தை தயார் செய்து வைத்திருக்கவில்லை என்பதை அவர் அறிகிறார். திரு. லீ அவர்களின் முதுமைக்கால மறதி நோய் தற்போது மிதமான அல்லது இறுதிக்கட்ட நிலையில் இருப்பதாகவும், அவருக்கு இனி நீண்டகால அதிகாரப் பத்திரத்தைத் தயார் செய்யும் மனநல ஆற்றல் இல்லை என்றும் அவரது வழக்கமான மருத்துவர் மதிப்பிடுகிறார். திரு. லீயின் மகள், ஒரு சமூக சேவையாளரிடம் அவரது விருப்பங்களைப் பற்றி விவாதிக்கிறார், அப்போது தன் தந்தையின் பிரதிநிதியாக இருக்க நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம் என்பதை அறிகிறார். விண்ணப்பத்திற்குப் பிறகு, திரு. லீயின் மகள் அவரது பிரதிநிதியாக இருக்க முடியுமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்து, அவரை திரு. லீயின் பிரதிநிதியாக நியமிக்கலாம்.
தொழில்முறை பிரதிநிதிகள்
தொழில்முறை பிரதிநிதிகள் மற்றும் அதிகாரம் பெற்ற நியமனதாரர்கள் (PDD) திட்டம், குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் இல்லாத நபர்களுக்கு, அவர்களின் பிரதிநிதியாக இருந்து முடிவெடுக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் செப்டம்பர் 2018-இல் அமலுக்கு வந்தது.
ஒரு நபர் தனது மனநல ஆற்றலை இழந்த நிலையில், அதிகாரம் பெற்ற நியமனதாரரை நியமிக்கவில்லை என்றால், மற்றும் மற்றவர்கள் (அடுத்தக்கட்ட உறவினர்கள் போன்றோர்) இந்த நபருக்கு ஒரு பிரதிநிதியை நியமிக்க விண்ணப்பிக்கவில்லை என்றால், குடும்ப நீதிமன்றங்கள் இந்த நபருக்கு ஒரு தொழில்முறை பிரதிநிதியை நியமிக்கலாம்.
தொழில்முறை பிரதிநிதிகள் மற்றும் அதிகாரம் பெற்ற நியமனதாரர்கள்:
- அவர்களின் சேவைகளுக்காக ஊதியம் பெறுவர்;
- அவர்கள் யாருக்காகச் செயல்பட நியமிக்கப்படுகிறார்களோ அவருக்குச் சொந்தக்காரராக இருக்கக்கூடாது;
- அந்த நபரின் சார்பாக அவர்கள் எடுத்த முடிவுகள் மற்றும் செலவுகளை விளக்குவதற்குப் பொது காப்பாளர் அலுவலகத்திற்கு ஆண்டு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்; மற்றும்
- மனநல ஆற்றல் சட்டத்தால் குறிப்பிடப்பட்ட ஒரு தொழில்முறைக் குழுவில் இருக்கும் தகுதியான தொழில்நிபுணராக (வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கணக்காளர்கள், துணை சுகாதார நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள்) இருக்க வேண்டும்.
தொழில்முறைப் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரம் பெற்ற நியமனதாரர்கள் திட்டம் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, பொது காப்பாளர் அலுவலகம் குறித்த இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும். பதிவுசெய்யப்பட்ட தொழில்முறைப் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரம் பெற்ற நியமனதாரர்களின் பட்டியலையும் இங்கே காணலாம்.
கூடுதல் வளஆதாரங்கள்
எனது மரபுடைமை
இது ஒரு சிங்கப்பூர் அரசாங்க இணையதளமாகும், இதில் வாழ்க்கை இறுதித் திட்டமிடல் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன. நீண்டகால அதிகாரப் பத்திரத்தைத் தயார்செய்தல் (LPA) பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள். இந்தப் பக்கம் மாண்டரின் (中文), மலாய் (மேலாயு) மற்றும் தமிழ் மொழிகளிலும் கிடைக்கிறது.
நிபுணர்களிடம் கேளுங்கள் - முன்கூட்டியே திட்டமிடுதல்: நிதி மற்றும் சட்டம்
முடக்கப்பட்ட சொத்துக்களுக்கு எவ்வாறு தீர்வு காண்பது மற்றும் LPA எவ்வாறு செயல்படுகிறது என்பது போன்ற சில நிதி மற்றும் சட்டக் கவலைகளை AIC-இன் இந்தக் காணொளி தீர்க்கிறது.
ஆதாரம்: Agency for Integrated Care
பிரதிநிதித்துவம் (டெபுடிஷிப்) கடமைகள் பற்றிய இணையவழித் தொடர்
இந்த 50 நிமிட இணையவழித் தொடர் ஒரு பிரதிநிதியின் கடமைகள் குறித்த வழிகாட்டியாக உள்ளது. இந்த இணையவழித் தொடரில், பிரதிநிதியின் பங்குகள் மற்றும் அவர்கள் யாருக்காகச் செயல்படுகிறார்களோ அந்த நபருக்கான பொறுப்புகள், அவர்கள் தங்கள் நீதிமன்ற உத்தரவை எவ்வாறு புரிந்துகொண்டு அதற்கு இணங்க வேண்டும், பிரதிநிதி அறிக்கை படிவத்தை எவ்வாறு நிரப்புவது என்பது பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
ஆதாரம்: Ministry of Social & Family Development