
ஆல்சைமர் நோய் என்பது மிகவும் நன்கு தெரிந்த மற்றும் ஆராய்ச்சி செய்யப்பட்ட முதுமைக்கால மறதி நோயின் வகையாகும், இது நியோகார்டெக்ஸில் உள்ள செல்லுலார் மட்டத்தில் நிகழும் மாற்றங்களால் ஏற்படுகிறது. நாங்கள் ஆல்சைமர் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள், பரவலான நிலை மற்றும் ஆபத்து பற்றிய பொதுவான விளக்கத்தை வழங்குகிறோம்.
ஆல்சைமர் நோய் என்றால் என்ன?
ஆல்சைமர் நோய் (AD) என்பது முதுமைக்கால மறதி நோயின் மிகவும் பொதுவான வகையாகும், கண்டறியப்படும் அனைத்து முதுமைக்கால மறதி நோய் வகைகளில் இந்த ஆல்சைமர் நோய் (AD) 60-80% இடம் வகிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது 1. இது வீரியம் அடையக்கூடிய நரம்பியல் மற்றும் அறிவாற்றல் சார்ந்த நோயாகும், அதாவது மற்ற உடல்நலப் பிரச்சனைகள் இருப்பதைத் தவிர்த்து காலப்போக்கில் இதன் அறிகுறிகள் படிப்படியாக மோசமடையும். மூளையில் செல்லுலார் மட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுவதாலும், வயதுக்கு ஏற்பவும் இது மெதுவாக வீரியமடைகிறது. ஆல்சைமர் நோயின் முக்கிய அறிகுறி மூளையில் உள்ள நியூரான்களைச் சுற்றி அமிலாய்டு-பீட்டா புரதங்கள் அசாதாரண முறையில் படிவது ஆகும்.
(படம்: ஆரோக்கியமான மூளையின் அமைப்பும் ஆல்சைமர் நோயின்போது அவதானிக்கப்பட்ட மூளையின் அமைப்பும், adapted from Brejyeh and Karaman, 2020)
பொதுவாக, இந்தப் புரதங்கள் கழிவுகளாக அப்புறப்படுத்தப்படுகின்றன, ஆனால் இந்தச் செயல்முறைக்கு புரதங்களை வெட்டும் மூன்று நொதிகளின் (α-, β- மற்றும் γ-செக்ரெடேஸ்) முறையான ஈடுபாடு தேவைப்படுகிறது. இந்த நொதிகளில் ஏதேனும் ஒன்று அசாதாரண செயல்பாட்டை வெளிப்படுத்தும்போது, பீட்டா-அமிலாய்டு புரதங்கள் நியூரான்களின் வெளிப்புறத்தைச் சுற்றி படிந்து, படலங்களை உருவாக்குகின்றன, இவை நியூரான்களுக்கு இடையிலான தகவல்தொடர்புக்கு இடையூறாக இருக்கின்றன. இது இறுதியில் நியூரான்களின் செல் இறப்புக்கும், மொழி, நினைவகம் மற்றும் திட்டமிடலுக்குத் தேவையான பகுதிகளில் உள்ள கார்டெக்ஸ் எனப்படும் புறணி (மூளைத் திசு) சுருங்குவதற்கும் வழிவகுக்கிறது.
மற்றொரு பொதுவான விளக்கம் என்னவென்றால், நியூரான் செல்களுக்குள் டௌ புரதத்தால் ஆன நச்சுக் கட்டிகள் உருவாகுவதாகும். இந்த நச்சுக்கட்டிகள் நியூரோஃபைப்ரிலரி டேங்கிள்கள் (மூளையிலுள்ள நியூரான்களுக்குள் உருவாகும் புரதங்களின் நச்சுக்கட்டிகள்) என்று அழைக்கப்படுகின்றன, இவை இரண்டும் ஒரு நபருக்கு ஆல்சைமர் நோய் இருக்கிறதா என்பதைக் குறிக்கும் உயிரியல் குறிகாட்டிகளாகக் கருதப்பட்டாலும், ஆல்சைமர் நோய் இல்லாத வயதானவர்களின் மூளைகளில் அமிலாய்டு புரத படலங்கள் சிதறிய நிலையில் பொதுவாகக் காணப்படுகின்றன. நியூரோஃபைப்ரில்லரி நச்சுக்கட்டிகள் சிதைக்கப்பட்ட நியூரைட்டுகளில் அமிலாய்டு புரதம் அதிக அடர்த்தியாக நிரம்பியிருக்கும் நியூரிடிக் படலங்கள் ஆனது ஆல்சைமர் நோய்க்கான மிகவும் குறிப்பிட்ட குறிப்பானாகக் கருதப்படுகின்றன.
ஆல்சைமர் நோய் எவ்வளவு பொதுவானது?

படம்: வயது வாரியாக அமிலாய்டு-பீட்டா தொடர்பான ஆல்சைமர் நோயின் உலகளாவிய பரவல் நிலை, adapted from Gustavsson et. al)
முறையான நோயறிதலுக்கான அளவுகோலை விட அறிகுறியின் தீவிரம் குறைவாக உள்ளவர்களைத் தவிர்த்து (மருத்துவ ரீதியான அறிகுறிகளுக்கு முந்தைய ஆல்சைமர் நோய்), உலகளவில் சுமார் 32 மில்லியன் மக்களுக்கு ஆல்சைமர் நோயுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது3.
ஆல்சைமர் நோயின் பரவல் நிலை குறித்து பார்க்கும்போது, வயது என்பது மிக முக்கியமான காரணியாக உள்ளது. 65 வயதைத் தாண்டி ஒவ்வொரு 5 வயது அதிகரிப்பிலும், ஆல்சைமர் நோயின் பரவல் நிலை தோராயமாக இரட்டிப்பாகிறது. 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களிடத்தில் குறைந்தது 25% பேருக்கு ஆல்சைமர் நோய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுட்காலத்தில் காணப்படும் பாலின ரீதியான வித்தியாசங்களைக் கருத்தில் கொண்டு பார்த்தாலும் கூட, ஆண்களை விட பெண்களுக்கு ஆல்சைமர் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.2
ஆல்சைமர் நோயின் முக்கிய அறிகுறிகள்
ஆல்சைமர் நோய் வீரியமடையும் செயல்பாட்டு மற்றும் அறிவாற்றல் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. பொதுவாக, நோயின் ஆரம்ப கட்டத்தில், இந்நோயுள்ள நபர் மருத்துவ ரீதியான அறிகுறிகளுக்கு முந்தைய நிலை எனப்படும் ஒரு கட்டத்திற்கு உட்படுவார், அதன்போது அறிகுறிகள் எதுவும் தோன்றாமல் இருக்கும் அல்லது மிகவும் லேசானதாக இருக்கும், அந்த நபருக்கு லேசான மறதி இருக்கும், ஆனால் அன்றாட நடவடிக்கைகளில் செயல்பாட்டு ரீதியான குறைபாடு எதுவும் தென்படாமல் இருக்கலாம்.
லேசான நிலையில், அந்த நபருக்கு ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவதிலும் விஷயங்களை நியாபகம் வைத்துக் கொள்வதிலும் சிரமங்கள் இருக்கலாம். அவர்கள் தான் இருக்கும் இடம் மற்றும் நேரம் குறித்து புரிந்து கொள்ள முடியாத நிலையிலும் இருக்கலாம், மேலும் அவர்கள் மனநிலையில் ஏற்ற இறக்கங்கள் அல்லது சோர்வான மனநிலையையும் அனுபவிக்கக்கூடும்.
ஆல்சைமர் நோயின் மிதமானது முதல் தீவிரமான நிலையில், அந்த நபருக்கு நினைவுத்திறன் இழப்பு அதிகமாகும், அவருக்கு தனது குடும்பம் மற்றும் நண்பர்களை அடையாளம் காண்பதில் சிரமம் இருக்கலாம். அவரது உந்துசக்தி கட்டுப்பாடு, வாசிப்பு, எழுத்து மற்றும் பேச்சுத்திறன் பாதிக்கப்படலாம். இறுதியில், மூளையின் இயக்கச் செயல்பாட்டிற்கான பகுதிகள் பாதிக்கப்படும்போது மற்றும் விழுங்குவதிலும் சிறுநீர் கழிப்பதிலும் சிரமம் ஏற்படும்போது அவர் படுக்கையில் இருக்க நேரிடலாம்.
65 வயதிற்கு முன்பே அறிகுறிகள் தோன்றினால், அந்த நபருக்கு இளவயது ஆல்சைமர் நோய் இருப்பதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான சூழல்களில் 65 வயதிற்குப் பிறகே இந்நோய் கண்டறியப்படுகின்றன, இது தாமதமாகத் தொடங்கும் ஆல்சைமர் நோய் என்று அழைக்கப்படுகிறது. தாமதமாகத் தொடங்கும் ஆல்சைமர் நோயில், கார்டெக்ஸ் மற்றும் ஹிப்போகாம்பஸில் (நினைவாற்றலுக்குப் பொறுப்பான மூளைப் பகுதி) கட்டமைப்பு மாற்றங்கள் லேசான அறிவாற்றல் குறைபாட்டுடன் மட்டுமே காணப்படுகின்றன. இந்நிலையில், அறிகுறிகளை சமாளித்து, அதிலிருந்து மீளவும் முடியும், அதனால்தான் ஆல்சைமர் நோய்க்கான முன்கூட்டியே பரிசோதிப்பது முன்கணிப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்
ஒருவருக்கு கலப்பு முதுமைக்கால மறதி நோயும் ஏற்படலாம், இது ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வகை முதுமைக்கால மறதி நோய் இருக்கும்போது ஏற்படுகிறது. கலப்பு முதுமைக்கால மறதி நோயின் பெரும்பாலான நிகழ்வுகள் ஆல்சைமர் மற்றும் இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோயுடன் ஏற்படுகின்றன, ஏனெனில் இவை இரண்டும் முதுமைக்கால மறதி நோயின் மிகவும் பொதுவான இரண்டு வகைகளாக காணப்படுகின்றன. கலப்பு முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுக்கு இரண்டு வகை முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளும் இருக்கும், அவற்றுள் ஒரு வகை முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகள் பெரும்பாலும் அதிகமாக
ஆல்சைமர் நோய்க்கான மரபணு ஆபத்து
தாமதமாகத் தொடங்கும் ஆல்சைமர் நோயுடன் ஒப்பிடுகையில், இளவயது ஆல்சைமர் நோய் ஆனது பரம்பரை மரபணு ஆபத்து காரணிகளால் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதன் பொருள், உயிரியல் ரீதியாக உங்களுக்கு தொடர்புடைய ஒருவருக்கு இளவயது ஆல்சைமர் நோய் இருந்தால், உங்களுக்கு அந்த நோய் உருவாக அதிக வாய்ப்பு இருக்கலாம். ஆல்சைமர் நோயின் மரபணு ஆபத்து குறித்து ஒருவர் பரிசோதிக்கப்படும்போது, அவர் பின்வருவனவற்றிற்காக பரிசோதிக்கப்படுவார்:
- இறுதியில் அமிலாய்டு-பீட்டா புரதங்களை உருவாக்குகின்ற புரதங்களுக்கான குறியீட்டு மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வுகள்.
- அமிலாய்டு புரதத்தை அகற்றுவதில் ஈடுபடும் செக்ரெடேஸ் நொதிகளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் புரதங்களில் ஏற்படும் பிறழ்வுகள்.
நியூரான்களின் செல் சவ்வுக்கு அருகிலுள்ள கொலஸ்டிரால் (Cholesterol) அளவுகள், இவை செக்ரெடேஸ் நொதிகளின் செயல்பாட்டையும் பாதிக்கின்றன. அதிக கொலஸ்டிரால் அளவு நியூரான்களில் உள்ள லிப்பிட் வளர்சிதை மாற்ற மண்டலத்தின் (கொழுப்புகளின் சேமிப்பகம் மற்றும் செரிமான மண்டலம்) சமநிலையை சீர்குலைக்கிறது, இது அமிலாய்டு படலங்கள் விரைவாக உருவாவதை ஊக்குவிக்கிறது. இதன் காரணமாக, லிப்பிட் வளர்சிதை மாற்றத்தில் ஈடுபடும் அபோலிபோபுரோட்டீன் E (ApoE) எனப்படும் நியூரான்களுக்குள் இருக்கும் ஒரு புரதம், ஆல்சைமர் நோய் அபாயத்துடனான அதன் தொடர்பு குறித்தும் ஆராய்ச்சியாளர்களால் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகிறது. இந்தப் புரதத்தில் பல வடிவங்கள் உள்ளன, ஆனால் நம்மில் பெரும்பாலோருக்கு இதன் மூன்று பொதுவான வடிவங்களில் ஒன்றினுடைய மரபணுவே உள்ளது. ApoE2 மரபணு உள்ள நபர்களுக்கு ஆல்சைமர் நோய் ஏற்படுவதற்கான ஆபத்து குறைவாக உள்ளதாக கருதப்படுகிறது, அதே நேரத்தில் ApoE4 மரபணு உள்ள நபர்களுக்கு இளவயது அல்லது தாமதமாகத் தொடங்கும் ஆல்சைமர் நோய் ஏற்படுவதற்கான ஒட்டுமொத்த ஆபத்து அதிகமாக உள்ளது.
இந்தக் குறிப்பிட்ட மரபணுக்களைக் கொண்டிருப்பது ஆல்சைமர் நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கிறது என்கிறபோதிலும் இந்நோய் கண்டிப்பாக ஏற்படும் என்ற உத்தரவாதம் கிடையாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய மரபணு பரிசோதனைகள், ஆல்சைமர் நோய் ஏற்படும் அபாயத்தில் உள்ள நபர்களுக்கு ஆலோசனை வழங்க உதவுகின்றன, இதன் மூலம் அவர்கள் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்து இந்நோயின் அபாயத்தை நிர்வகிக்கலாம். இந்த மரபணு ஆபத்து காரணிகள் இளவயது ஆல்சைமர் நோய் ஏற்படுவதில் ஆதிக்கம் செலுத்துகின்றன, ஆனால் தாமதமாகத் தொடங்கும் ஆல்சைமர் நோயை உருவாக்கும் அபாயத்தில் கூடுதல் விளைவைக் கொண்டிருப்பதாகத் தோன்றும் 20க்கும் மேற்பட்ட மரபணுக்கள் உள்ளன.
அபாயத்தை நிர்வகித்தல்
ஆல்சைமர் நோய் லிப்பிட் வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடையது என்பதால், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் டிஸ்லிபிடெமியா போன்ற பல நாள்பட்ட மருத்துவ நோய்களும் ஆல்சைமர் நோயுடன் தொடர்புடையதாக உள்ளன. எனவே, ஒருவரின் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் இந்த நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும். இவற்றுள் அடங்குவன:
- போதிய உடற்பயிற்சி இல்லை
- அடிக்கடி அல்லது அதிகம் மது அருந்துவது
- புகைப்பழக்கம்
- அதிக கொழுப்புள்ள அல்லது அதிக சர்க்கரையுள்ள உணவுமுறையைக் கொண்டிருப்பது
- போதிய தூக்கம் இல்லை
வாழ்க்கை முறை மற்றும் மரபணு காரணிகளைத் தவிர, தலையில் காயம் மற்றும் காற்று மாசுபாடு மற்றும் கன உலோக வெளிப்பாடு போன்ற சுற்றுச்சூழல் காரணிகளும் ஆல்சைமர் நோய் ஏற்படுவதற்கான ஒருவரின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். ஆல்சைமர் நோய் மற்றும் பிற வகை முதுமைக்கால மறதி நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை நிர்வகிப்பது பற்றி நீங்கள் இங்கே மேலும் படிக்கலாம்.
நோயறிதல் சோதனை
நோயறிதல் செயல்முறை பெரும்பாலும் அந்த நபரின் மருத்துவ வரலாறு மற்றும் கவனிக்கப்படும் அறிவாற்றல் மற்றும் நடத்தை ரீதியான மாற்றங்களை பரிசீலனை செய்வதன் மூலம் தொடங்குகிறது. அந்த நபர் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் பற்றியும், குடும்பத்தில் உள்ள பிறருக்கு ஆல்சைமர் நோய் இருப்பது கண்டறியப்பட்டதா என்பது குறித்தும் மருத்துவர் கேட்பார். அறிவாற்றல் மற்றும் நடத்தை அறிகுறிகள் கவலைக்குரியவையா என்பதையும், அவை தினசரி செயல்பாட்டைக் கணிசமாகப் பாதிக்கின்றனவா என்பதையும் தீர்மானிக்க, மினி-மென்டல் ஸ்டேட் எக்ஸாம் (MMSE) மற்றும் மாண்ட்ரீல் அறிவாற்றல் மதிப்பீடு (MoCA) போன்ற அறிவாற்றல், செயல்பாட்டு மற்றும் நடத்தை பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அந்த நபரிடம் கேட்கப்படலாம்.
இதைத் தொடர்ந்து பெரும்பாலும் மேக்னெட்டிக் ரெசோனன்ஸ் இமேஜிங் (MRI) அல்லது கம்ப்யூட்டட் டோமோகிராபி (CT) போன்ற மூளைக்கான இமேஜிங் ஸ்கேன்கள் செய்யப்படும். இது நோயறிதலை ஆதரிக்கும் வகையில், கார்டெக்ஸில் சுருக்கம் போன்ற கட்டமைப்பு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா, அல்லது ஆல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுவதைப் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய பிற மருத்துவ நோய்கள், அதாவது பக்கவாதம் அல்லது மூளைக் கட்டிகள் உள்ளதா என்பதை மருத்துவர் மதிப்பிட அனுமதிக்கிறது.
ஆல்சைமர் நோயுடன் தொடர்புடைய அமிலாய்டு-பீட்டா அல்லது டௌ போன்ற அசாதாரண புரத அளவுகளைச் சரிபார்க்க, மூளைத் தண்டுவட திரவம் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் உள்ளிட்ட கூடுதல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படலாம்.
முழு நோயறிதல் செயல்முறை பற்றிய கூடுதல் தகவலுக்கு, இந்தக் கட்டுரையைப் படித்திடுங்கள்.
எனக்கோ அல்லது என் அன்புக்குரியவருக்கோ நான் எவ்வாறு ஆதரவைப் பெறுவது?
உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு அல்லது உங்களுக்கே ஆல்சைமர் நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக நீங்கள் கவலைப்பட்டால், உங்கள் பொது மருத்துவர் (GP) அல்லது குடும்ப மருத்துவரைப் பரிந்துரைக்காக அணுகலாம் அல்லது நோயறிதலைப் பெறுமாறு அவர்களை ஊக்குவிக்கலாம். பின்வருவனவற்றின் மூலம் நோயறிதலைப் பற்றி மேலும் அறிந்திடுங்கள்:
நீங்கள் சமூகத்தைச் சென்றடையும் குழுவையும்(CREST) தொடர்பு கொள்ளலாம். ஆதரவைப் பெற, 6377 0700 என்ற எண்ணில் டிமென்ஷியா சிங்கப்பூர் உதவி எண்ணை அழைத்திடுங்கள்.
Video: I Was An SAF Commando. Alzheimer’s Won’t Stop The Fighter In Me
Source: CNA Insider
சிங்கப்பூர் ஆயுதப்படை (SAF) முன்னாள் அதிகாரி பீட்டர் எஸ்ட்ராப், 61 வயதில் மிகவும் பொதுவான முதுமைக்கால மறதி நோய் வகைகளில் ஒன்றான ஆல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அதிகாரியான இவர் அறிவாற்றல் வீழ்ச்சியை எதிர்கொள்கிறார், இது அவரது நினைவாற்றலைப் பாதிக்கிறது. இந்தக் காணொளியில், அவரும் அவரது மனைவி எவோனும் நோயறிதலுக்குப் பிறகு முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்வதற்கு எவ்வாறு அவர்களின் சூழலை மாற்றியமைத்துக் கொண்டனர் என்பது பற்றிப் பேசுகிறார்கள்.
கூடுதல் வளஆதாரங்கள்

Understanding Different Types of Dementia (PDF)
Source: National Institute on Aging
இந்தச சுவரொட்டி நான்கு பொதுவான முதுமைக்கால மறதி நோய் வகைகளை அவற்றின் பண்புகள் மற்றும் வேறுபாடுகள் அடிப்படையில் சுருக்கமாகக் கூறுகிறது.

Alzheimer’s disease and dementia: what everyone needs to know by Sabat, Steven R.
Available for loan from the National Library Board
இந்த வழிகாட்டியில், முதுமைக்கால மறதி நோயை ஒரு நோயாக வரையறுத்து, அதன் அறிகுறிகள், முதுமைக்கால மறதி நோய் ஒருவரின் வாழ்க்கையை (அகநிலை அனுபவம், உணர்ச்சி நல்வாழ்வு மற்றும் சமூக வாழ்க்கை உட்பட) எவ்வாறு மாற்றும், முதுமைக்கால மறதி நோயின் உயிரியல் அம்சங்கள், அது எவ்வாறு கண்டறியப்படுகிறது மற்றும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபருடன் நேர்மறையான உறவைப் பேணுவதற்கு பராமரிப்பு கூட்டாளர்கள் என்ன செய்யலாம் என்பதை சபாத் கோடிட்டுக் காட்டுகிறார்.
Tell us how we can improve?
Read Next
- Alzheimer’s Association. What is Alzheimer’s Disease? (2024, November 10.)
- Breijyeh, Z., & Karaman, R. (2020). Comprehensive Review on Alzheimer’s Disease: Causes and Treatment. Molecules (Basel, Switzerland), 25(24), 5789. https://doi.org/10.3390/molecules25245789
- Gustavsson A, Norton N, Fast T, et al. Global estimates on the number of persons across the Alzheimer’s disease continuum. Alzheimer’s Dement. 2023; 19: 658–670. https://doi.org/10.1002/alz.12694
Alzheimer’s Disease. Encyclopedia of the Neurological Sciences p. 91-96. Editors: Robert B. Daroff, Michael J. Aminoff Schachter AS, Davis KL. Alzheimer’s disease. Dialogues Clin Neurosci. 2000 Jun;2(2):91-100.
Villamil-Ortiz, B.J.L. Eggen, G.P. Cardona-Gόmez, Chapter 26 – Lipids, beta-secretase 1, and Alzheimer disease. Editor(s): Colin R. Martin, Victor R. Preedy, Rajkumar Rajendram, Factors Affecting Neurological Aging, Academic Press, 2021, Pages 289-299.
- The Straits Times. Blood test could detect Alzheimer’s years before symptoms occur (2022, December 6). https://www.straitstimes.com/world/united-states/blood-test-could-detect-alzheimer-s-years-before-symptoms-occur