
மனக்கவலை என்பது முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களிடம் பொதுவாகக் காணப்படுகிறது, இது தினசரி வாழ்க்கையை சவாலானதாக ஆக்கலாம். இந்தக் கட்டுரை, முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களிடத்தில் மனக்கவலை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகளை ஆராய்கிறது, மேலும் பராமரிப்பாளர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை ஆதரிப்பதற்கான நடைமுறை உதவிக்குறிப்புகளை வழங்குகிறது.
மனக்கவலை என்றால் என்ன
மனக்கவலை என்பது பயம் அல்லது மன அழுத்தத்தின் உணர்ச்சிபூர்வமான பிரதிபலிப்பாகும். அவ்வப்போது மனக்கவலை ஏற்படுவது பொதுவானது என்றாலும், மிகுந்த பயம் அல்லது கவலையை அனுபவிப்பது பொதுவானதல்ல.1 முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களிடத்தில் காணப்படும் மன அழுத்தம் போன்ற பிற தொடர்புடைய நிலைகளிலிருந்து மனக்கவலை வித்தியாசப்படுகிறது.
மனக்கவலை: தினசரி வாழ்க்கையில் குறுக்கிடும் மிகுந்த கவலை அல்லது பயம், பெரும்பாலும் அறிவாற்றல் குறைவு அல்லது அன்றாட வழக்கத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையதாக உள்ளது.
மனஅழுத்தம்: இது பொதுவாக கண்டுணரும் அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்கும் விதமான குறுகிய கால கவலையாக இருக்கும். 2
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்கு, மனக்கவலை என்பது பெரும்பாலும் தீவிரமடைந்து, அன்றாடப் பணிகள் மற்றும் தொடர்பாடல்களை கடினமாக்குகிறது. இரத்தநாளம் சார்ந்த முதுமைக்கால மறதி நோய் அல்லது ஃப்ரெண்டொடெம்போரல் டிமென்ஷியா (Frontotemporal Dementia, FTD) உள்ளவர்கள் பொதுவாக மனக்கவலையை அனுபவிக்கின்றனர். மனக்கவலை அவர்களை எவ்விதம் பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதும், அதை எவ்வாறு சமாளிப்பது என்பதைக் கற்றுக்கொள்வதும், பராமரிப்பாளர் மற்றும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர் ஆகிய இருவரின் வாழ்க்கைத் தரத்தையும் பெரிதும் மேம்படுத்தும்.
மனக்கவலைக்கான காரணங்கள்
சில நேரங்களில், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் நரம்பியல் மற்றும் உளவியல் காரணிகளால் மனக்கவலையை அனுபவிக்கலாம். மனக்கவலைக்கான சில பொதுவான காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
நரம்பியல் காரணிகள்
உணர்ச்சியை ஒழுங்குபடுத்துவதை உள்ளடக்கிய மூளையின் பகுதிகளுக்கு ஏற்படும் சேதம்:
முதுமைக்கால மறதி நோய் அதிகரிக்கையில், உணர்ச்சிகளைச் செயலாக்குவதற்குப் பொறுப்பான மூளையின் பகுதிகளை இது பாதிக்கலாம்.
அறிவுத்திறன் குறைதல்:
நினைவாற்றலில் சிரமம், மற்றும் இடஞ்சார்ந்த ஆற்றுப்படுத்தல் பயத்தையும் மனக்கவலையையும் உருவாக்கக்கூடும்.
நரம்பியல் காரணிகள்
எதிர்காலத்தைப் பற்றிய பயம்:
முதுமைக்கால மறதி நோயின் ஆரம்ப கட்டங்களில், தனிநபர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படலாம்.
குழப்பம் மற்றும் சூழல் சார்ந்த உணர்வு இல்லாமை:
முதுமைக்கால மறதி நோயின் பிந்தைய கட்டங்களில், தொலைந்து போனதைப் போன்ற உணர்வின் காரணமாக அல்லது பழக்கமான முகங்களை அடையாளம் காண இயலாமை காரணமாக மனக்கவலை ஏற்படலாம்.
பங்களிக்கும் பிற காரணிகள்
வலி அல்லது உடல் உபாதைகள் போன்ற அசௌகரியம் அல்லது பசி:
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்களுக்கு உடல் உபாதைகள் அல்லது பசி கூட மனக்கவலையைத் தூண்டலாம்.
மருந்துகள்:
முதுமைக்கால மறதி நோய் உள்ளவர்களுக்குப் பயன்படுத்தப்படும் சில மருந்துகள் மனக்கவலையை அதிகரிக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
மன அதிர்ச்சி அல்லது கடந்த கால மனநலப் பிரச்சினைகள்:
முன்பு ஏற்பட்ட மன அதிர்ச்சி, துஷ்பிரயோகம் அல்லது ஏற்கனவே இருக்கும் மனக்கவலை கோளாறுகள் தனிநபர்களின் மனக்கவலையை இன்னும் அதிகரிக்கச் செய்யக்கூடும்.3
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் மனக்கவலை, அந்தப் பிரச்சினையின் கட்டத்தைப் பொறுத்து வித்தியாசமாகத் தோன்றலாம். ஆரம்ப கட்டங்களில், எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள் மற்றும் இந்தப் பிரச்சினை எவ்வாறு மோசமடையக்கூடும் என்ற பயம் காரணமாக மனக்கவலை ஏற்படலாம். இருப்பினும், முதுமைக்கால மறதி நோயின் பிந்தைய கட்டங்களில், மனக்கவலை ஆனது பொதுவாக நிகழ்காலத்தைப் பற்றிய குழப்பத்தினாலேயே வேரூன்றுகிறது, எடுத்துக்காட்டாக ஒருவர் தனது சுற்றுப்புறத்தை அடையாளம் காண இயலாமல் இருப்பது.
மனக்கவலையின் அறிகுறிகள்
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களிடத்தில் மனக்கவலையின் அறிகுறிகளை அடையாளம் காண்பது முக்கியம். இந்த அறிகுறிகள் தனிநபரின் முதுமைக்கால மறதி நோய் எந்தக் கட்டத்தில் உள்ளது என்பதைப் பொறுத்தும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பொறுத்தும் மாறுபடும்.
பொதுவான அறிகுறிகளில் பின்வருவன அடங்கக்கூடும்:
- அமைதியின்மை அல்லது பதற்றமாக இருப்பது
- எரிச்சல் அல்லது விரக்தி அடைவது
- விரைவான இதயத் துடிப்பு அல்லது நடுக்கம்
- தூக்கமின்மை
- குழப்பம் அதிகரிப்பது
- தொடர்ந்து ‘பதட்டத்தில்’ இருப்பது போல் உணர்வது
மனக்கவலையுடன் இருக்கும் அன்பிற்குரியவர்களுக்கு ஆதரவாக இருத்தல்
அமைதியான மற்றும் கணிக்கக்கூடிய சூழலை அமைத்திடுங்கள்
சீரான வழக்கத்தை கடைப்பிடிப்பது நிச்சயமற்ற தன்மையையும் மனக்கவலையையும் குறைக்கும். சாப்பிடும் நேரம், உடை அணியும் நேரம் மற்றும் குளிக்கும் நேரம் போன்ற அன்றாட நடவடிக்கைகளை முன்கூட்டியே கணிக்கக்கூடியதாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள், மேலும் சூழலில் ஏதேனும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதைக் குறைக்கவும். மாற்றங்கள் தேவைப்பட்டால், அவற்றைப் படிப்படியாக அறிமுகப்படுத்தவும். இது உங்கள் அன்பிற்குரியவர்கள் பாதுகாப்பாக உணருவதற்கு உதவுவதன் மூலம் அவர்களின் மனக்கவலையைக் குறைக்கும்.
ஆறுதல் வார்த்தை கூறி, அவர்கள் கூறுவதை அங்கீகரியுங்கள்
முதுமைக்கால மறதி நோயுள்ள உங்கள் அன்புபிற்குரியவர்கள் மனக்கவலையை வெளிப்படுத்தும்போது, அவர்களின் உணர்வுகளை சரி தவறென்று ஆராயாமல் ஒப்புக்கொள்ளுங்கள்.
- அவர்களின் மனக்கவலையை மெதுவாக ஒப்புக்கொள்ளுங்கள்: “நீங்கள் கவலைப்படுவது எங்களுக்குப் புரிகிறது, உங்களுக்கு உதவ நாங்கள் இங்கே இருக்கிறோம்.”
- உங்கள் குரலின் தொனியை அமைதியான நிலையில் வைத்துப் பேசுங்கள்.
- அவர்களின் கவலை உணர்ச்சிகளைக் குறைக்க, கலைகள் அல்லது விளையாட்டுகள் போன்று அவர்கள் விரும்பும் செயல்பாடுகளின் மூலம் அவர்களின் கவனத்தைத் திசைத்திருப்புங்கள்.
உடற்பயிற்சிகள்
கவலை உணர்வுகளைக் குறைக்க நடைபயிற்சி அல்லது தோட்டக்கலை போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகளுக்கு உங்கள் அன்பிற்குயவர்களுடன் உறுதுணையாக செல்லுங்கள். நடனம் அல்லது பாடல் போன்ற குழு அமர்வுகளில் பங்கேற்க அவர்களை ஊக்குவிக்கவும்.
இளைப்பாறும் பயிற்சிகள்
கலை மற்றும் கைவினைப்பொருட்கள் அல்லது இசை போன்ற இளைப்பாறும் நடவடிக்கைகளில் பங்கேற்க உங்கள் அன்பிற்குரியவர்களை வழிநடத்துவதைக் கருத்தில் கொள்ளுங்கள். கவலையான உணர்ச்சிகளைக் குறைக்க அவர்கள் வழக்கமாக செய்யும் விஷயங்களில் அவர்களின் மனதை ஒருமுகப்படுத்தும் செயல்பாடுகளைச் சேர்க்கவும்.
அவர்களின் மனக்கவலையைக் குறைக்க உதவும் எளிய சுவாச நுட்பங்களைக் கற்றுக்கொள்ள இந்தச் சிறிய மனதை ஒருமுகப்படுத்தும் காணொளியைப் பாருங்கள்.
Mindfulness Exercise for Stroke Survivors and Caregivers [English Version]
ஆதாரம்: ஒருங்கிணைந்த பராமரிப்புக்கான முகமை
இந்தக் காணொளி அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரத்யேக 10-படிநிலையைக் கொண்ட மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியை விளக்குகிறது, ஆனால் இது பாதிக்கப்பட்ட நடமாட்டம் உள்ள எவருக்கும் இருக்கக்கூடிய மன அழுத்தத்தைச் சமாளிக்கவும் ஏற்றது. காணொளியில் உள்ள அனைத்து பயிற்சிகளையும் நிறைவு செய்ய 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
நிபுணர் உதவியை நாடுங்கள்
மனக்கவலையானது கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிட்டால், பராமரிப்புத் திட்டங்களை அதற்கேற்ப மாற்றியமைக்க அல்லது மருந்து விருப்பங்களை ஆராய சுகாதார வழங்குநரை அணுகவும்.
இந்த உத்திகள் பொதுவாக முதுமைக்கால மறதி நோயின் ஆரம்பம் முதல் நடுத்தர கட்டங்களில் வாழும் நபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் அன்பிற்குரியவர் கூடுதலான மற்றும் மாற்று சிகிச்சைகளையும் முயற்சிக்க விரும்பலாம். இதில் அரோமாதெரபி, குத்தூசி மருத்துவம் அல்லது மசாஜ் சிகிச்சை ஆகியவை அடங்கும்.
இந்தச் சிகிச்சைகளில் ஏதேனும் ஒன்றில் பங்கேற்பதற்கு முன்பு முதலில் ஒரு மருத்துவரை அணுகவும்.
ஆல்சைமர்’ஸ் சமுதாயம் மற்றும் DementiaUK என்பவற்றிலிருந்து தழுவப்பட்டது.
முடிவுரை
அன்பிற்குரியவர்களின் மனக்கவலையைச் சமாளிப்பது சவாலானதாக இருக்கலாம், ஆனால் பொறுமை மற்றும் சரியான உத்திகள் மூலம், நீங்கள் மனக்கவலையைக் குறைத்து, உங்களுக்கும் உங்கள் அன்பிற்குரியவர்களுக்கும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவலாம்.
- Alzheimer’s Society (2025). Anxiety and Dementia. https://www.alzheimers.org.uk/about-dementia/symptoms-and-diagnosis/anxiety-dementia.
- Barrell, A. (2020). Stress vs. anxiety: How to tell the difference. Medical News Today. https://www.medicalnewstoday.com/articles/stress-vs-anxiety
- Dementia UK. (October, 2022). Managing anxiety and depression in a person living with dementia. https://www.dementiauk.org/information-and-support/health-advice/managing-anxiety-and-depression-in-a-person-living-with-dementia/